நாகர்கோவிலில் தச்சுத்தொழிலாளி கல்லால் தாக்கி கொலை 6 மணி நேரமாக நாடகமாடிய மனைவி கைது தற்காப்புக்காக தாக்கியதாக பரபரப்பு வாக்குமூலம்

நாகர்கோவில், டிச.13:  நாகர்கோவிலில் குடிபோதையில் வந்து தொல்லை கொடுத்த கணவனை கல்லால் தாக்கி படுகொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில், கோட்டார், கரியமாணிக்கபுரம், ஆழ்வார்கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் பழனி ஆசாரி மகன் ஐயப்பன்(50). தச்சு தொழிலாளி. இவருக்கு கிருஷ்ணவேணி என்ற மனைவியும், பொன்னி, சுபா என்று இரண்டு மகள்களும் உண்டு. பொன்னிக்கு திருமணமாகிவிட்டது, சுபா கல்லூரியில் படித்து வருகிறார். ஐயப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. வேலை முடிந்து வரும்போது ஐயப்பன் குடிபோதையில் வருவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாக ஐயப்பன் குடிக்காமல் இருந்து வந்துள்ளார். இந்தநிலையில் மீண்டும் அவர் குடிப்பழகத்திற்கு ஆளாகியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு அதிக அளவு குடிபோதையில் வீட்டிற்கு வந்து தூங்கியுள்ளார். இந்தநிலையில் நேற்று காலையில் பார்த்தபோது வீட்டில் தரையில் இரு தலையணைகளுக்கு நடுவே பின்னந்தலையில் பலத்த ரத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அறை அந்த முழுவதும் ரத்தம் வழிந்தோடிய நிலையில் உறைந்து காணப்பட்டது.

அவர் இடுப்பில் லுங்கி மட்டுமே அணிந்த நிலையில் காணப்பட்டார். சட்டை ஏதும் அணிந்திருக்கவில்லை. தகவல் அறிந்ததும் கோட்டார் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். ஏஎஸ்பி ஜவஹர், வடசேரி இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர், கோட்டார் சப் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் மோப்பநாய் ‘ஓரா’ வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அது அந்த பகுதியில் உள்ள சுடுகாடு வரை சென்று திரும்பியது. பின்னர் அந்த பகுதிகளிலும் சுற்றி வந்தது. போதையில் வந்ததால் குடும்ப தகராறு காரணமாக அடித்து கொலை செய்யப்பட்டாரா? அல்லது இரவில் போதையில் எழுந்து நடந்தபோது தடுமாறி விழுந்து பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக போலீசார், ஐயப்பனின் மனைவி கிருஷ்ணவேணி, மகள் ஆகியோரிடம் புகார் மனு பெறுவதற்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கிருஷ்ணவேணி, இரவு 12.30 மணி வரை கணவர் குடிபோதையில் வீட்டில் சத்தம் போட்டு கொண்டிருந்தார். நான் சத்தம்போட்டேன். பின்னர் அவரது அப்பாவை பார்க்க போகிறேன் என்று கூறி விட்டு சுடுகாட்டு பகுதிக்கு சென்று வந்தார். போகும்போது கீழே விழுந்து விழுந்து சென்றார். கதவு திறந்துதான் கிடந்தது. இரவு சுமார் 2 மணியளவில் தான் பாத்ரூம் செல்வதற்காக எழுந்து பார்த்தபோது அவரை அறையில் பார்த்தேன்.

அப்போது கதவு திறந்த நிலையில் கிடந்தது. அவர் தூங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது. பின்னர் நான் தூங்கிவிட்டேன். காலையில் எழுந்து பார்த்த போதுதான் ரத்த வெள்ளத்தில் அவர் பிணமாக கிடந்தார். கீழே விழுந்ததில் அடிபட்டு இறந்திருக்கலாம் என்று தெரிவித்தார். இது போலீசாரை மேலும் குழப்பமடைய செய்தது. மோப்பநாய் சோதனையில் தடயங்களோ, வேறு பொருட்களோ கண்டறியவில்லை. ஆனால் சுடுகாட்டிற்கு சென்றுவிட்டு வீட்டில் வந்து அங்கேயே சுற்றி சுற்றி நின்று கொண்டதும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து தடயவியல் நிபுணர்களும் வீட்டில் வந்து தடயங்களை சேகரித்த செய்தனர். இறந்த ஐயப்பனின் பின்னந்தலையில் 4 இடங்களில் பலத்த வெட்டு காயம் போன்ற பலத்த காயங்கள் இருந்தது . இதுவும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இந்தநிலையில் தடயங்களை அழிக்க முயற்சி நடந்ததா? என்ற அடிப்படையில், வீட்டில் வெளியே உள்ள அடுப்பு பகுதியில் குவிந்திருந்த கரியை தோண்டி போலீசார் ஆய்வு செய்தனர். அதுபோல் அந்த பகுதியில் கிடந்த கம்பு, கட்டை போன்றவை எடுத்து ரத்த கறை ஏதேனும் காணப்படுகிறதா? என்ற சோதனையிட்டனர். இருப்பினும் எந்த தடயமும் போலீசாருக்கு சிக்கவிலை. கோட்டார் போலீசார் கொலை வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டனர். மனைவியிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் கணவரை கொலை செய்ததை நேற்று மாலையில் கிருஷ்ணவேணி ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பாக கிருஷ்ணவேணி கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: எனது முதல் மகள் பொன்னிக்கு 3 மாதங்கள் முன்பு திருமணம் நடந்துள்ளது. அவர் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இது கணவர் ஐயப்பனுக்கு பிடிக்கவில்லை. அதனால் குடித்துவிட்டு வந்து மனைவி, மகளை திட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஏழு ஆண்டுகளாக குடிக்காமல் இருந்தவர் மீண்டும் குடிக்க தொடங்கினார். குடித்துவிட்டு வீட்டில் இருப்பவர்களை மிகவும் கேவலமாக திட்டுவது வழக்கம். இரண்டாவது மகளையும் முதல் மகளுடன் ஒப்பிட்டு திட்டுவதை வழக்கமாக கொண்டிருந்தார். மகள் கல்லூரிக்கு சென்று வரும்போது அவரை சந்தேகப்பட்டு கேவலமான வார்த்தைகளால் திட்டுவது வழக்கம். நேற்று (நேற்று முன்தினம்) குடித்துவிட்டு வழக்கம்போல் தகராறு செய்தார். அப்போது தட்டிக்கேட்ட என்னை கல் ஒன்றை எடுத்து வந்து தாக்க முயன்றார். அப்போது அந்த கல்லை பறித்து தற்காப்புக்காக நான் திருப்பி தாக்கினேன். கட்டை போன்றவற்றால் அவரது தலையில் தாக்கினேன். இதில் அவர் பலத்த காயமடைந்து கீழே விழுந்தார். பின்னர் ரத்தம் வெளியாகி இறந்தது தெரியவந்தது. குடிபோதையில் கீழே விழுந்து அடிபட்டு இறந்தார் என்று அனை

வரையும் நம்ப வைக்க முயற்சித்தேன்’ என்று தெரிவித்துள்ளார். கணவரை கல்லால் தாக்கியும், அடித்தும் கொலை செய்துவிட்டு சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நாடக மாடிய கிருஷ்ணவேணியை பின்னர் போலீசார் கைது செய்தனர்.

Related Stories: