பரமக்குடி தேசிய நெடுஞ்சாலையில் அசுர வேகத்தில் செல்லும் பஸ்கள் கேள்விக்குறியாகும் பாதுகாப்பு

பரமக்குடி, டிச. 12: பரமக்குடி மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அதிவேக பஸ்களால் இருசக்கர வாகனம் மற்றும் பாதசாரிகளின் உயிர் கேள்விகுறியாக உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பரமக்குடி மிகமுக்கியமான நகரமாக இருக்கிறது. பரமக்குடியில் 7 கிலோ மீட்டர் தூரம் தேசிய நெடுஞ்சாலை செல்வதால் இந்த சாலையில் ராமேஸ்வராம் மற்றும் ராமநாதபுரத்திலிருந்து மதுரை நோக்கி அதிகளவில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதைப்போல் பரமக்குடியிலிருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் மதுரை மற்றும் மேற்கு மாட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. அரசு பஸ்கள் குறிப்பாக மதுரையிலிருந்து ராமநாதபுரம் செல்லும் ஒன் டூ திரி அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்களின் போட்டியில் அசுர வேகத்தில் செல்கின்றன.

நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள கிராமத்தினர் தேசிய நெடுஞ்சாலையில் கடந்து செல்வதற்கே ஒருவிதமான அச்சத்தில் சென்று வருகின்றனர். அதிவேகமாக செல்லும் பஸ்களால் இருசக்கர வாகனத்தில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர். இதைப்போல் இரவு நேரங்களில் இந்த சாலை வழியே செல்வோரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உருவாக்கியுள்ளது. அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு நேர பிரச்னைகளால் அப்பாவி பொதுமக்களின் உயிர் கேள்விக்குறியாக உள்ளது. காலை, மாலை நேரங்களில் பள்ளிக்கு வந்து செல்லும் மாணவ, மாணவிகள் அதிகளவில் சைக்கிள் மற்றும் நடந்து செல்வதால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு சென்றுவருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் லாரியை முந்துவதற்காக சென்றபோது இருசக்கர வாகனத்தில் மோதி இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்னர். இதுபோன்ற அதிவேக அரசு பஸ்களால் உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கதையாகி வருகிறது. அரசு மற்றும் தனியார் பஸ்களின் வேகத்தை கட்டுப்படுத்த ரோந்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். இதுபோன்ற உயிரிழப்பை தடுக்க நெடுஞ்சாலை போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரமக்குடி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

Related Stories: