சேதமடைந்து கிடக்கும் சிக்கல் மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்க கோரிக்கை

சாயல்குடி, டிச. 12: சாயல்குடி அருகே சிக்கல் கிராமத்தில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் சேதமடைந்து கிடப்பதால் பெண்கள் அவதிப்பட்டு வருவதாக கூறுகின்றனர். கடலாடி ஊராட்சி ஒன்றியம், சிக்கல் கிராமத்தில் 2004&2005 ஆம் ஆண்டுகளில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, குழியலறை, துணி துவைக்கும் இடம் மற்றும் 8 கழிப்பறைகள் கட்டப்பட்டது. இரவு நேரங்களிலும் பெண்கள் பயன்படுத்த வசதியாக தெருவிளக்கு மற்றும் கட்டிடத்தில் போதிய மின் விளக்குகள் அமைக்கப்பட்டது. தற்போது போதிய பராமரிப்பின்றி சுகாதாரவளாகம் சேதமடைந்து கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கட்டிடத்தின் பெரும்பாலான பகுதி இடிந்தும், ஒருபுறம் புதர் மண்டியும் கிடக்கிறது. அருகிலுள்ள போர்வெல், தண்ணீர் தொட்டியும் இடிந்து தரைமட்டமாக கிடக்கிறது.

சுகாதாரவளாகம் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் பஞ்சாயத்து நிர்வாகம் பூட்டு போட்டு பூட்டி விட்டது. இதனால் பொதுமக்கள் போதிய கழிப்பறை வசதியின்றி திறந்த வெளியை பயன்படுத்தி வருவதாகவும். தற்போது மழைக்காலம் என்பதால் தண்ணீர் தேங்கி கிடப்பதால் இரவு நேரங்களில் காட்டுபகுதிக்கு செல்ல முடியாமலும், விஷசந்துகள் தீண்டும் அபாயம் இருப்பதாகவும் கூறுகின்றனர். இந்த ஊராட்சியில் தற்போது வீடுகளில் மானியத்தில் கட்டிகொடுக்கப்படும் தனிநபர் கழிப்பறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் கழிப்பறையின்றி கடும் அவதிப்பட்டு வருவதாக பெண்கள் கூறுகின்றனர். மேலும் இக்கிராமத்தில் கிராமத்தில் தற்போது தண்ணீர் வசதி இருப்பதால், அவற்றை அருகிலிருக்கும் சுகாதாரவளாகம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், குளிப்பதற்கு, துணிகள் துவைப்பதற்கு பயன்படும். எனவே இங்குள்ள சுகாதார வளாகத்தை மீண்டும் சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: