ஊரக உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடு 2,577 வாக்குச்சாவடிகள் தயார்

திருவள்ளூர், டிச. 12: ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச்சீட்டு முறை பின்பற்றப்படுவதால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும், எட்டு வாக்குப்பதிவு அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக, திருவள்ளூர் மாவட்டத்தில் 2,577 வாக்குச் சாவடிகள் தயார் நிலையில் உள்ளன. வேட்புமனு தாக்கல் பணி ஒருபுறம் நடந்து கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் தேர்தல் ஏற்பாடுகளும் துவங்கிவிட்டன. வாக்குச்சாவடிக்கு தேவையான ஓட்டுப்பெட்டிகள் தயாராக உள்ளன. இறுதி வேட்பாளர் பட்டியல் தயாரானதும், ‘’போஸ்டர்’’ மற்றும் ஓட்டுச்சீட்டுகளும் அச்சிடப்படும். முன்னதாக, வாக்குப்பதிவு அலுவலர் நியமன பணி வேகமெடுத்துள்ளது. வாக்குச்சாவடியில், தலைமை வாக்குச்சாவடி அலுவலர், வாக்காளர் பட்டியலை சரிபார்த்து, ‘’டோக்கன்’’ வழங்கும் அலுவலர், நான்கு ஓட்டுச்சீட்டுகளை வழங்கும் நான்கு அலுவலர், வாக்காளர் விரலில் மை வைக்கும் அலுவலர், வாக்குப்பெட்டி பாதுகாப்பு அலுவலர் என 8 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். ஆசிரியர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், தேர்தல் பணிக்கு நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்ட அளவில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: