முதுகுளத்தூர் அருகே வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்புகளால் நெல், மிளகாய் பயிரை சூழ்ந்த மழைநீர் மோட்டார் மூலம் வெளியேற்றும் அவலம்

சாயல்குடி, டிச. 11: முதுகுளத்தூர் அருகே பாசன வரத்துக்கால்வாய் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வெளியேற வழியின்றி நெல், மிளகாய் பயிரை சூழ்ந்து கிடப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். முதுகுளத்தூர்-அபிராமம் சாலை மார்க்கத்தில் கீரனூர், செல்வநாயகபுரம், வைத்தியனேந்தல், நல்லூர் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட கிராம பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள் வயற்காடுகளில் உழவார பணிகளை செய்து, நெல், மிளகாய் மற்றும் ஊடு பயிராக சின்னவெங்காயத்தை விதைத்தனர். பயிர்கள் முளையிட்டு வளர்ந்துள்ள தருவாயில் மீண்டும் கனமழை பெய்ததால் வயற்காடுகளில் தண்ணீர் பெருகியது. இந்நிலையில் முதுகுளத்தூர்-அபிராமம் சாலையின் ஓரங்களில் செல்லும் பாசன வரத்து கால்வாய்களை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் வயற்காடுகளில் தேங்கிய நீர் வழிந்தோட வழியில்லாமல் வயற்காடுகளில் தேங்கி கிடப்பதால் நெல், மிளகாய் பயிர்கள், வெங்காயம் தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் வாளி கொண்டு இறைத்தும், மோட்டார்கள் கொண்டும் தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர்.

இது குறித்து கீரனூர் விவசாயிகள் கூறும்போது, முதுகுளத்தூர்-அபிராமம் சாலையை ஒட்டி செல்லும் பாசன வரத்து கால்வாயினை சிலர் ஆக்கிரமித்துள்ளதால், வயற்காடுகளில் தேங்கும் தண்ணீர் செல்ல வழியில்லாமல் வயற்காடுகளிலேயே தேங்கி கிடக்கிறது. இதனால் பயிர்கள் அழுகி வருகிறது. வேறு வழியின்றி கூடுதல் பணம் செலவழித்து மோட்டார்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றி வருகிறோம். மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும்போது சாலையில் தண்ணீர் ஓடுகிறது. இதனால் வாகனங்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே இப்பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, பாசன வரத்து கால்வாய்களை தூர்வார அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: