ஆர்.எஸ்.மங்கலம் அருகே சிதலமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி சீரமைக்க வலியுறுத்தல்

ஆர்.எஸ்.மங்கலம், டிச. 11: ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ஆனந்தூரில் இருந்து திருத்தேர்வளை செல்லும் சாலை மிகவும் குண்டும், குழியுமாக சிதலமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட திருத்தேர்வளை கிராமத்திற்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலை வழியாக தினசரி பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் திருத்தேர்வளையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற காளி கோவிலுக்கு ஏராளமான பக்தர்களும் சென்று வருகின்றனர். இந்த பிரதான சாலை ஆய்ங்குடி மற்றும் கப்பகுடி வழியே திருவாடாணை செல்லும் சாலையுடன் இணைகிறது. இச்சாலை அமைத்து பல வருடங்களாகியும் எவ்வித பராமரிப்பு பணியும் மேற்கொள்ளவில்லை.

இதனால் கடுமையாக சேதமடைந்து குண்டும், குழியுமாகி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இச்சாலை வழியாக அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத நிலையில் சாலை உள்ளது. இதனால் உயிரிழப்பு ஏற்படக்கூடிய நிலையும் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே கப்பகுடி, திருத்தேர்வளை கிராம மக்கள் எவ்வித சிரமுமின்றி செல்ல சாலையை உடனடியாக சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே சம்மந்தப்பட்ட துறை நிர்வாகம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: