கார்த்திகை திருநாளையொட்டி மலைக்கோட்டையில் ஏற்றப்பட்ட மகா தீபம்

திருச்சி, டிச. 11: கார்த்திகை திருநாளையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சியில் நேற்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.தென்கயிலாலயம் என போற்றப்படும் மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கிய நிலையில் எழுந்தருளி உள்ளார். ரத்தினாவதி என்ற பெண்ணிற்கு சிவபெருமான் அவள் தாய் வடிவில் வந்து சுகப்பிரசவம் செய்த தலம். ஆகையால் இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தாயுமானசுவாமி என்று அழைக்கப்படுகிறார்.

Advertising
Advertising

மலைக்கோட்டை 273 அடி உயரமும் 417 படிகள் கொண்டதாகவும் உள்ளது. இந்த மலையின் உச்சியில் உச்சிப்பிள்ளையாரும் மலையின் நடுப்பகுதியில் தாயுமானசுவாமியும் மட்டுவார்குழலம்மையும் மலையின் கீழ் பகுதியில் மாணிக்க விநாயகரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.மலைக்கோடடை தாயுமானசுவாமி கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று மாலை கொண்டாடப்பட்டது. இதையடுத்து மலைக்கோட்டையின் நடுப்பகுதியில் உள்ள தாயுமானசுவாமி கோயிலிலிருந்து உச்சிப்பிள்ளையார் சன்னதிக்கு முன் உள்ள உயரமான கோபுரத்தில் வைக்கப்பட்டிருந்த செப்பு கொப்பரையில் 300 மீட்டர் திரியை கொண்டு 900 லிட்டர் இலுப்பை எண்ணை, நல்லெண்ணை மற்றும் நெய் ஆகியவற்றை கலந்து ஊற்றி தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது.

முன்னதாக நேற்று முன்தினம் மாலை அந்த கோபுரத்தில் அருகேயும் தாயுமானசுவாமி சன்னதியிலும் பரணி தீபம் ஏற்றப்பட்டது. இந்த கார்த்திகை தீபஜோதி தொடர்ந்து 3 நாட்கள் அணையாமல் எரியும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோயில் உதவி ஆணையர் விஜயராணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: