கும்பகோணம் பகுதி கடைகளில் ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கும்பகோணம், டிச. 11: கும்பகோணம் பகுதி கடைகளில் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடைக்காரர்களுக்கு ரூ.57 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் வெளிமாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இரவு நேரத்தில் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது என நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று மதியம் கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என நகர்நல அலுவலர் பிரேமா, சுகாதார ஆய்வாளர்கள் டேவிட் பாஸ்கரராஜ், முருகானந்தம் மற்றும் நகராட்சி அலுவலர்கள் சோதனையிட்டனர்.
Advertising
Advertising

அப்போது பல்வேறு கடைகளில் இருந்து ஒரு டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் தடையை மீறி விற்பனை செய்ததால் ரூ.57 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் கும்பகோணம் நகராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தாலோ அல்லது விற்பனையோ, உற்பத்தி செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிப்பதுடன் கடைக்கு சீல் வைத்து உரிமம் ரத்து செய்யப்படும். யாரேனும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வது அல்லது விற்பனை செய்வது பொதுமக்களுக்கு தெரியவந்தால் உடனடியாக நகர்நல பிரிவுக்கு தகவல் கொடுக்க வேண்டும் என நகர்நல அலுவலர் பிரேமா தெரிவித்துள்ளார்.

Related Stories: