சட்டவிரோதமாக இயங்கும் தண்ணீர் லாரிகளால் ஏற்படும் இறப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

சென்னை, டிச. 11:  சட்ட விரோதமாக இயங்கும் தண்ணீர் லாரிகள் மூலம் ஏற்படும் விபத்து மற்றும் இறப்பு குறித்து 2 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு  சென்னை  உயர் நீதி மன்றம் உத்தரவு.   ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட பருத்திப்பட்டு, நாரயணபுரம், கோனாம் பேடு உள்ளிட்ட கிராமங்களில் குளங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வீடுகள்,  வழிபாட்டு தலம் மற்றும் கடைகள் ஆகியவற்றை அகற்ற கோரியும், சட்டவிரோதமாக லாரிகள் மூலம் குளங்களில் தண்ணீர் திருடுவதை தடுக்க கோரியும் கோனாம் பேடு கிராம பொது நல சங்கத்தின் தலைவர் ஜி. கருணாநிதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்சில் கடந்த ஆண்டு ஜூலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 2018 ஜூலை 24ம் தேதி அண்ணா சாலையில் தண்ணீர் ஏற்றிச்சென்ற 12 சக்கரங்கள் கொண்ட டேங்கர் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மகேஷ் மற்றும் அவரது தாயார் நிர்மலா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளனர். வாகன நெரிசல் உள்ள நேரத்தில் தண்ணீர் லாரிகளை இயக்க யார் அனுமதி கொடுத்து.

 இதனால் ஏற்படும் விபத்துகள் குறித்து அரசுக்குத் தெரியுமா? எனவே, தண்ணீர் டேங்கர் லாரிகளுக்கு அனுமதியளித்தது எப்படி?. தண்ணீர் லாரிகள் மோதியதால் எத்தனை விபத்துகள் நடந்துள்ளது?. அதில் எத்தனை பேர் பலியாகியுள்ளனர் தண்ணீர் லாரிகள் ஏற்படுத்திய விபத்துகள், அதில் காயமடைந்த மற்றும் பலியானவர்களின் எண்ணிக்கை குறித்த விவரங்களையும், தண்ணீர் லாரிகள் மற்றும் ஓட்டுநர்களுக்கு உரிமம் வழங்கும் நடைமுறைகளை குறித்தும் சென்னை போலீஸ் கமிஷனர் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் எஸ்பிக்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள இடங்களை 8 வார காலத்திற்குள் திருவள்ளுர் கலெக்டர் மற்றும் ஆவடி மாநகராட்சி ஆணையர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

 இந்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்தவில்லை. இதையடுத்து, திருவள்ளூர் கலெக்டர், ஆவடி நகராட்சி ஆணையர், ஆவடி தாசில்தார், ஆவடி இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது கோனாம்பேடு கிராம பொதுநல சங்கம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

 இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.  

  வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த 10 ஆண்டுகளில் தண்ணீர் லாரிகள் மூலம் ஏற்படும் இறப்பு மற்றும் விபத்துகள் எத்தனை?. சட்ட விரோதமாக ஓடும் தண்ணீர் லாரிகள் எத்தனை?   தண்ணீர் லாரிகளின் ஓட்டுபவர்கள் முறையான  ஓட்டுநர்களா?, ஒரு நாளைக்கு சென்னை மாநகரத்தின் ஓடும் தண்ணீர் லாரிகளின் எண்ணிக்கை என்ன?  போன்ற கேள்விகளுக்கு இதுவரை அரசுத் தரப்பில் பதில் அளிக்கவில்லை.  தமிழகத்தில் மணல் மாபியா போல் தண்ணீர் மாபியாக்களும் அதிகரித்துள்ளனர். தமிழகத்தில் தண்ணீர் சேமித்து வைக்க போதிய உட்கட்டமைப்பு வசதிகள் இல்லை. இப்போது நாம் சுதாரிக்கவில்லை என்றால் நமது சந்ததியினருக்கு சிக்கல் ஏற்பட்டுவிடும். எனவே, இது தொடர்பாகவும், தண்ணீர் லாரிகளால் ஏற்படும் விபத்துக்கள், சட்டவிரோத தண்ணீர் லாரிகள் எண்ணிக்கை ஆகியவை குறித்தும் 2 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: