விருத்தாசலம் பெரியார் நகர் பகுதியில் திறந்தவெளியில் குப்பைகளை கொட்டும் அவலம்

விருத்தாசலம்: விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட தெற்கு பெரியார் நகர், பாரிஜாதம் பூ தெருவில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் குப்பைத்தொட்டி வசதி இல்லாததால் பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்தும் கழிவு பொருட்களை தெருவின் அருகிலேயே திறந்த வெளியில் கொட்டி வருகின்றனர். மேலும் கழிவுநீர் வாய்க்கால் வசதி இல்லாததால் அவர்கள் பயன்படுத்தும் கழிவுநீர் அனைத்தும் தெருக்களில் தேங்கி நின்று சுகாதார சீர்கேட்டை விளைவித்து வருகிறது. இதனால் எந்நேரமும் அப்பகுதியில் கொசுத்தொல்லை ஏற்படுவதோடு மழைக்காலங்களில் குப்பைகளில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறி துர்நாற்றம் வீசி வருகிறது.

அப்பகுதியில் உள்ள பன்றிகள் இரைதேடி குப்பைகளை கிளறி வருவதால் துர்நாற்றம் வீசி உணவு உண்ண முடியாத நிலையில் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, இப்பகுதி மக்களின் சுகாதார நலன் கருதி அப்பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும். கழிவுநீர் கால்வாய் வாய்க்கால் வசதி செய்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: