நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

திருவெறும்பூர், டிச.10: திருவெறும்பூர் வட்டார விவசாயிகளுக்கு நெற்பயிரில் குருத்துப்பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வட்டார உதவி வேளாண் இயக்குநர் ஆலோசனை வழங்கியுள்ளார். சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிரானது பல்வேறு வகையான பூச்சிகளால் தாக்குதலுக்குள்ளாகி மகசூலில் பாதிப்பு ஏற்படுகிறது. அவற்றுள் குருத்துப் பூச்சினால் மட்டும் 60 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குருத்து பூச்சியின் தாக்குதலானது அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை மிகுந்து காணப்படும். எனவே இச்சமயங்களில் தகுந்த பாதுகாப்பு முறைகளை பின்பற்றி குருத்துப்பூச்சியின் தாக்குதலை கட்டுப்படுத்தவில்லை என்றால் விளைச்சலில் பாதிப்பு ஏற்படும். இதனை கட்டுப்படுத்துவதற்கு விவசாயிகள் பெரும்பாலும் ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை மட்டுமே பயன்படுத்துவதால் பூச்சிகளுக்கு எதிர்ப்பு தன்மை உண்டாகி கட்டுப்பாடு பாதிப்பதில்லை என்பதோடு மட்டுமல்லாமல் நன்மை செய்யும் உயிரினங்களும் அழிந்து விடுகின்றன. மேலும் இதனால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் சுற்றுப்புற சூழலுக்கும் பல்வேறு விதமான பக்க விளைவுகள் உண்டாகின்றன.

அதனால் குருத்து பூச்சியின் முட்டை குவியல்கள் இலைகளின் நுணிகளில் பழுப்பு நிறத்தில் காணப்படும். வளர்ந்த அந்துபூச்சிகளானது மஞ்சள் நிறத்தில் கூறிய மூக்கு போன்ற அமைப்போடு இலைகளின் நுனிகளில் அமர்ந்திருக்கும்.

தாக்குதலின் அறிகுறிகள் நாற்றாங்கால் மற்றும் நடவு வயலில் உள்ள இளம் பயிர்களின் தூர்கட்டும் பருவம் வரை தாக்கும் போது “நடுக்குருத்து காய்ந்துவிடும்’’ அல்லது இறந்த குருத்துக்கள் உண்டாகும். அதனை பிடித்து இழுத்தால் எளிதாக கையோடு வந்துவிடும். பயிர் நன்கு வளர்ந்து பால் பிடிக்கும் பருவத்தில் தாக்குதல் காணப்படும்போது நெற்கதிருக்கு செல்லும் உணவு தடைப்பட்டு நெல்மணிகள் பால்பிடிக்க முடியாமல் வெளிவரும் கதிர்கள் அனைத்தும் வெண் அல்லது சாவி கதிர்களாக மாறிவிடும். இதனால் பொருளாதார சேதநிலை ஏற்படும். இளம் பயிரில் ஒரு சதுர மீட்டருக்கு இரண்டு முட்டை குவியல்கள் இருத்தல் அல்லது ஒரு சதுர மீட்டருக்கு 1 அல்லது அதற்கு மேற்பட்ட குருத்து பூச்சிகள் காணப்படுதல், வளர்ச்சி பருவத்தில் 10 சதவீத நடுக்குருத்து காய்ந்து விடுதல் அல்லது 2 சதவீத வெண்கதிர்கள் காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

நாற்றுகளை வயலில் நடும்போது முட்டைக்குவியல்கள் உள்ள இலைகளின் நுனிகளை கிள்ளிவிட்டு நடவு செய்ய வேண்டும். ஆண் குருத்துப்பூச்சிகளை கவர்ந்தழிக்கும் இனக்கவர்ச்சி பொறிகளை ஏக்கருக்கு 5 என்ற அளவில் நடவு செய்த 10 நாட்களுக்கு பிறகு வயலில் ஆங்காங்கே வைக்க வேண்டும். இனக்கவர்ச்சி பொறியை பயன்படுத்துவதால் அதிலிருந்து வெளிப்படும் பிரமோன் எனப்படும் ஒருவித ரசாயன பொருளானது ஆண் அந்து பூச்சிகளை மட்டும் கவர்ந்து பின்பு கையால் அழிக்க வேண்டும். வயலில் காணப்படும் நன்மை செய்யும் பூச்சிகளை (தரைவண்டு, ஒட்டுண்ணி குளவி, தட்டான், இடுக்கிவாள் பூச்சி, நீர் தாண்டி, மற்றும் சிலந்தி) பாதுகாத்து பெருத்துதல் மூலமாக இயற்கையாகவே கட்டுப்படுத்தலாம். டிரைக்கோகிராம்மா ஜப்பானிக்கம் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஏக்கருக்கு 2 என்ற நெல் நடவு நட்ட 30வது நாளில் வெளியிட வேண்டும்.

ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மி.லி அல்லது 5 சதவிகிதம் வேப்பம்கொட்டை கரைசலை தேவையான அளவு ஒட்டும் திரவத்துடன் கலந்து தெளிக்க வேண்டும். குருத்துப்பூச்சியின் தாக்குதல் மிகவும் அதிகமாக (பொருளாதார சேத நிலை தாண்டும்போது) தென்படும்போது கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 எஸ்பி 400 கிராம் அல்லது பிப்ரோனில் 5 எஸ்சி 400 மி.லி கிராம் ஆகிய பூச்சிகொல்லி மருந்தினை 1 ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைதெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். இவ்வாறு திருவெறும்பூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எஸ்தர்பிரேமகுமாரி தெரிவித்துள்ளார்.

Related Stories: