வேட்புமனு தாக்கல் பணி: கலெக்டர் ஆய்வு வாக்கு எண்ணும் மையங்களை பார்வையிட்டார்

திருச்சி, டிச.10: திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டமாக நடைபெறும் 6 ஊராட்சி ஒன்றியங்களில் வேட்புமனுக்கள் பெறப்படுவதை கலெக்டர் சிவராசு நேரில் ஆய்வு செய்தார். திருச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் முதல் கட்டமாக அந்தநல்லூர், மணப்பாறை, மணிகண்டம், மருங்காபுரி, திருவெறும்பூர் மற்றும் வையம்பட்டி ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகின்ற 27.12.2019 அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி, வேட்பாளர்களிடம் வேட்பு மனுக்கள் பெறப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் சிவராசு நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மணப்பாறை ஊராட்சி ஒன்றியம், மொண்டிப்பட்டி ஊராட்சியில் கிராம வார்டு உறுப்பினர்களுக்கான வேட்புமனு பெறப்படுவதையும், மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கிராம ஊராட்சித் தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகிய பதவிக்கு போட்டியிட முதல் வேட்பு மனுக்கள் பெறப்படுவதை பார்வையிட்டார்.

வேட்பு மனுக்கள் பெறுவதற்கு நியமிக்கப்பட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்து மாநில தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை கடைபிடித்து, முறையாக வேட்பமனு பெற்றுள்ளனரா என்பதையும், ஊராட்சி ஒன்றியங்களில் இருப்பில் உள்ள வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்தார். தொடர்ந்து, ஊரக உள்ளாட்சி தேர்தலில் மணப்பாறை மற்றும் வையம்பட்டி ஊராட்சி ஒன்றியங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் குறிஞ்சி பொறியியல் கல்லூரி, மருங்காபுரியில் வளநாடு விடியல் மெட்ரிக் பள்ளி ஆகிய வாக்கு எண்ணிக்கை மையங்களையும் ஆய்வு செய்தார். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் போதிய இடவசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதி போன்ற அடிப்படை வசதிகள் உள்ளதா? என்பதையும்,

வாக்குப்பதிவு முடிந்தவுடன் வாக்குப்பெட்டிகள் வைக்கப்படும் அறை பாதுகாப்பாக உள்ளதா? என்பதையும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மருங்காபுரி சீனிவாசபெருமாள், ராஜா, மணப்பாறை பெரியசாமி, தர், வையம்பட்டி ஞானமணி, கென்னடி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: