குடந்தை மடத்து தெருவில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்றாததால் பொதுமக்கள் சாலை மறியல்

கும்பகோணம், டிச. 10: கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட மடத்துத்தெரு பகுதியில் வழிந்தோடும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கும்பகோணம் காமாட்சி ஜோசியர் தெரு, மடத்துத்தெரு, மந்திரி சந்து, சக்கரபாணி கீழ சன்னதி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தெருக்கள், சந்துகளில் கடந்த 6 மாதமாக பாதாள சாக்கடை மேன்ஹோல்கள் உடைந்து கழிவுநீர் வழிந்தோடியது. இதுகுறித்து நகராட்சி அதகாரிகளிடம் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் துப்பரவு தொழிலாளர்கள் வந்து கண்துடைப்புக்காக வேலைகளை செய்து விட்டு சென்று விடுகின்றனர். இதனால் கடந்த சில நாட்களாக கழிவுநீர் வழிந்தோடுவதுடன் கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகி துர்நாற்றம் வீசியது.

Advertising
Advertising

இதையடுத்து நேற்று காலை நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் நடவடிக்கை எடுக்காததால் கும்பகோணம் மடத்துத்தெருவில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவல் கிடைத்ததும் கும்பகோணம் கிழக்கு போலீசார் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கழிவுநீர் வழிந்தோடுவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். அதன்பேரில் சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.

Related Stories: