வாளவாடி கிராமத்தில் குடியிருப்புகளுக்குள் புகுந்த பிஏபி தண்ணீர்

உடுமலை,டிச.10:பகிர்மான கால்வாய் உடைந்து வழிந்த தண்ணீர் தோப்பில் நிரம்பி குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதிப்பட்டுவருகின்றனர். திருமூர்த்தி அணையில் இருந்து 3-ம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. பிரதான கால்வாயில் திறக்கப்படும் தண்ணீர், பகிர்மான கால்வாய்கள் வழியாக பாசன பகுதிகளுக்கு செல்கிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு உடுமலை அருகே வாளவாடி கிராமம் பழையூர் அருகே பகிர்மான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் வெளியேறிய தண்ணீர் அருகில்உள்ள தோப்புகளுக்கு பாய்ந்தது.இந்நிலையில், தோப்புகளில் குளம்போல் தேங்கிய தண்ணீர், தற்போது நிரம்பி வழிந்து, வாளவாடி கிராமத்தில் குடியிருப்புகளுக்குள் புகுந்தது. அங்கு சுமார் 150 வீடுகள் உள்ளன. இதில் 6 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. முழங்கால் அளவுக்கு தண்ணீர் நிற்பதால், கடும் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் பக்கத்தில் உறவினர் வீடுகளுக்கு சென்று தூங்குகின்றனர். குழந்தைகள் படிக்கவோ, சமையல் செய்யவோ முடியவில்லை என தெரிவித்தனர்.இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், பகிர்மான கால்வாய் உடைந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் சொல்லவில்லை. தோப்புக்கு தண்ணீர் வந்ததால் விட்டுவிட்டனர். தற்போது அதுவும் நிரம்பி குடியிருப்புகளில் குளம்போல் தேங்கியுள்ளது. எனவே, உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: