திருமுல்லைவாயல் காப்பகத்தில் இருந்து 26 சிறுவர்கள் மீட்பு

திருமுல்லைவாயல், டிச.10: ஆவடி அருகே திருமுல்லைவாயலில் பாலியல் குற்றசாட்டு புகாரில் சிக்கிய காப்பகத்திலிருந்து மீண்டும் 26 குழந்தைகளை மாவட்ட நீதிபதி உத்தரவின் பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புத்துறையினர் மீட்டனர். சென்னை, வில்லிவாக்கம் முருகேசன் நகரை சேர்ந்தவர் ஜேக்கப். இவரது மனைவி விமலா ஜேக்கப். இந்த தம்பதியினர்  திருமுல்லைவாயல் சரஸ்வதி நகர் 7 மற்றும் 12வது தெருக்களில் நித்தியவார்த்தை என்ற பெயரில் குழந்தைகள் காப்பகம் நடத்தி வந்தனர். இந்த காப்பகங்களில் 48 சிறுவர், சிறுமிகள் தங்கி,, அதே பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் படித்து வந்தனர். ‘இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இங்கு தங்கியிருந்த 10க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளுக்கு காப்பகத்தில் பணியாற்றி வரும் வார்டன்களான சாமுவேல், பாஸ்கர் மற்றும் உதவியாளர் முத்து ஆகியோர் பாலியல் தொல்லை கொடுத்தனர். மேலும், உடன்படாத சிறுவர்-சிறுமிகளை மூன்று பேரும் அடித்து உதைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

இது குறித்த புகாரின் அடிப்படையில் ஆவடி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ஷோபா ராணி தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காப்பக உரிமையாளர் ஜேக்கப், விமலா ஜேக்கப் மற்றும் பாஸ்கர், சாமுவேல், முத்து ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு தற்போது திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர், அங்கு தங்கிருந்த 48 சிறுவர், சிறுமிகளை மீட்டு திருவள்ளூரில் உள்ள அரசு காப்பத்தில் சேர்ந்தனர். இதன் பிறகு, அதிகாரிகள் அவர்களை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

பின்னர், அந்த காப்பகத்திற்கு அரசு அனுமதி மறுக்கப்பட்டு இழுத்து மூடப்பட்டது.  இதற்கிடையில், சமீபத்தில் சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதி செல்வநாதன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர்  திருமுல்லைவாயல் தனியார் காப்பகத்தை ஆய்வு செய்தனர். அப்போது, மீண்டும் அந்த காப்பகம் அனுமதியின்றி நடத்தப்பட்டது தெரியவந்தது. அங்கு சிறுவர், சிறுமிகள் உள்பட 26 பேர்கள் தங்கி இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதனை அடுத்து, நீதிபதி செல்வநாதன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமாருக்கு காப்பகத்தில் குழந்தைகளை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இதன்படி, நேற்று மாலை செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் காப்பகத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அங்கு தங்கியிருந்த 14சிறுமிகளும், 12 சிறுவர்களையும் மீட்டனர். இதன் பிறகு, அதிகாரிகள் அனைத்து சிறுவர், சிறுமிகளையும் வேன் மூலம் பாதுகாப்பாக அழைத்து கொண்டு திருவள்ளூருக்கு வந்தனர். பின்னர், அவர்களை அங்கு உள்ள குழந்தைகள் நல  குழுவிடம் ஒப்படைத்தனர். இதற்கு பிறகு, அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து விசாரணை நடத்தி ஒப்படைப்பார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: