பேரையூரில் மூடப்பட்ட தொழிற் மையம் மீண்டும் திறக்க தொழிலாளர்கள் வலியுறுத்தல்

சாயல்குடி, டிச.9: கமுதி அருகே பேரையூரில் இயங்கி வந்த கதர்கிராம பாவாத்து தொழிற்மையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என வேலையிழந்த தொழிலாளர்கள் அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.கமுதி அருகே பேரையூரில் மத்திய அரசின் உதவியோடு, தமிழ்நாடு கதர்கிராம தொழில் வாரியம் சார்பில் பாவாத்து தொழிற்மையம் இயங்கி வந்தது. தாட்கோ நிதி உதவியோடு சுமார் 2 கோடி மதிப்பீட்டில் 4 கட்டிடங்களில் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு லாபத்துடன் இயங்கி வந்தது. இதில் கதர் வேஷ்டி, துண்டுகள் உற்பத்தி செய்யப்பட்டது. இங்கு பருத்தியிலிருந்து தயாரிக்கப்படும் காட்டன் நூல்கள் திருப்பூர், கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் 15 நிரந்தர பணியாளர்களும், 10க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள், நூற்றுக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்களும் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் போதிய பராமரிப்பு இன்றி கடந்த 16 வருடங்களுக்கு முன்பு உற்பத்தி குறைந்து, நலிவடைந்தது. இதனை தொடர்ந்து இந்த தொழில்மையம் மூடப்பட்டது. இதனால் இதில் வேலை பார்த்து வந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலையை இழந்தனர்.

இந்நிலையில் இங்கு வேலை பார்த்த நிரந்தர பணியாளர்களுக்கு மட்டும் மாற்றுப்பணிகள் வழங்கப்பட்டது, இதன் அலுவலகம் மட்டும் எவ்வித பயன்பாடின்றி தற்போது கமுதியில் இயங்கி வருகிறது. மூடப்பட்ட தொழிற்மைய கட்டிடம், கட்டிடத்தில் உள்ள இயந்திரங்கள் பயன்பாடின்றி சேதமடைந்து வருகிறது. கட்டிடம் சேதமடைந்து கிடப்பதால் அதிலிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பீலான இயந்திரங்கள் மாயமாகி வருகிறது. இதுகுறித்து வேலை இழந்த தொழிலாளிகள் கூறும்போது, லாபத்துடன் இயங்கி வந்த தொழிற்சாலைக்கு, தொடர்ந்து இயங்குவதற்கு போதிய உதவிகளை அரசு செய்யவில்லை. இதனால் தொழில் நலிவடைந்து தொழிற்மையம் மூடு விழா கண்டது. இதனால் வேலை இழந்த தொழிலாளர்களுக்கு மாற்று தொழில் வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. ஆனால் 15 வருடங்கள் ஆகியும் பணி வழங்கவில்லை, இதனால் மற்ற கூலி வேலைக்கு சென்று வருகிறோம், தொடர்ந்து  தொழில், கூலி இன்றி குடும்பங்கள் வறுமையில் வாடி வருகிறது, எனவே பேரையூர் கதர்கிராம தொழிற்மையத்தை மீண்டும் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய உள்கட்டமைப்பு வசதியுடன் திறக்கவேண்டும் என கூறினர்.

Related Stories: