2,524 உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் இன்று வேட்புமனு தாக்கல் துவக்கம்

ஈரோடு,  டிச. 9:   மாவட்டத்தில் 2,524 உள்ளாட்சி பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்க  உள்ளது. இதையொட்டி இன்று வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. ஈரோடு மாவட்ட  கலெக்டரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான கதிரவன் இது குறித்து  கூறியுள்ளதாவது: தமிழகத்தில் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக  உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி  ஈரோடு மாவட்டத்தில் 19 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 183 ஊராட்சி  ஒன்றிய உறுப்பினர்கள், 225 சிற்றூராட்சி தலைவர் மற்றும் 2 ஆயிரத்து 97  சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் என 2 ஆயிரத்து 524 உறுப்பினர்கள் நேரடி  தேர்தல் மூலமாகவும், 14 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர்கள், ஒன்றியக்குழு துணை  தலைவர்கள், 225 சிற்றூராட்சி துணை தலைவர்கள் மறைமுகமாகவும் மொத்தம் 2  ஆயிரத்து 779 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.வேட்புமனு தாக்கல்  9ம் தேதி (இன்று) முதல் 16ம் தேதி வரையும், வேட்புமனுக்கள் 17ம் தேதி  பரிசீலனை செய்யப்படும். 19ம் தேதி வேட்புமனுக்கள் திரும்ப பெறும் நாள்.  இதைத்தொடர்ந்து  முதல்கட்ட வாக்குப்பதிவு 27ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 30ம்  தேதியும் நடைபெறும். வாக்குப்பதிவு காலை 9 மணிக்கு துவங்கி மாலை 5 மணிக்கு  முடிவடையும். வாக்கு எண்ணிக்கை 2ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கும்.  தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்களின்  முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு 6ம் தேதி நடைபெறும். மாவட்ட ஊராட்சி  மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணை தலைவர், கிராம ஊராட்சி துணை  தலைவர் ஆகியோர் தேர்வு செய்ய மறைமுக தேர்தல் 11ம் தேதி நடைபெறும்.  உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் மாதிரி நடத்தை  விதிமுறைகள் ஈரோடு மாவட்டத்தில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

 தற்போது  உள்ளாட்சி தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால்  வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உள்ளிட்ட அரசு  மற்றும் அரசு சார்ந்த கூட்டங்கள் ரத்து செய்யப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலை  சிறப்பாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். தேர்தல் மாதிரி நடத்தை  விதிமுறைகள் மீறப்பட்டால், புகார்களை 0424-2255365 என்ற தொலைபேசி எண்ணில்  தகவல் அளிக்கலாம். புகார்கள் உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு விசாரணையின்  அடிப்படையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: