பாரதிதாசன் பல்கலைக்கழக ரெட் ரிப்பன் கிளப்புக்கு தேசிய விருது

திருச்சி, டிச.5: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ரெட் ரிப்பன் கிளப்பிற்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.எய்ட்ஸ் பற்றிய ஓர் விழிப்புணர்வு திட்டத்தின் மூலம் இளையோருக்கு எய்ட்ஸ் நோய் வராமல் தடுத்தல், நோயால் ஏற்படும் ஆபத்தை உணர்த்துதல், இளைஞர்களிடையே தன்னார்வ ரத்த தானத்தை ஊக்குவித்தல் போன்றவை செயல்படுத்தப்படுகின்றன. திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக, மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் பாரதிதாசன் பல்கலைக்கழக ரெட் ரிப்பன் கிளப்பிற்கு தேசிய விருதினை வழங்கியுள்ளது. உலக எய்ட்ஸ் தினமான டிச.1ம் தேதி, புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சர், மருத்துவர் ஹர்ஷவர்தன், பாரதிதாசன் பல்கலைக்கழக ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் இலக்குமிபிரபாவிடம் விருதிற்கான சான்றிதழையும் நினைவுப் பரிசையும் வழங்கினார்.

Advertising
Advertising

2014-15ம் ஆண்டில் தன்னார்வ ரத்ததானம் வழங்குவதில் சிறந்த அரசு பல்கலைக்கழத்திற்கான விருது, தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு வழங்கியது குறிப்பிடத்தக்கது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் தன்னார்வ ரத்ததான முகாமை தொடர்ந்து நடத்தி வருகிறது. கடந்த 3 ஆண்டுகளில் 40,000 அலகிற்கும் மேலாக அரசு ரத்த வங்கிக்கு ரத்தம் வழங்கப்பட்டுள்ளது. எச்ஐவி எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ரெட் ரிப்பன் கிளப் செயல்படுத்தப்படும் கல்லூரிகளிலும் அதன் சுற்றியுள்ள கிராமங்களிலும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.தேசிய விருது பெற்றமைக்காக பாரதிதாசன் பல்கலைக்கழக ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் இலக்குமிபிரபாவுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் மணிசங்கர் மற்றும் பதிவாளர் கோபிநாத் உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: