சிறுமி பாலியல் பலாத்காரம் டிரைவர் போக்சோவில் கைது

ஈரோடு, டிச. 5:   ஈரோட்டில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குழந்தைகள் இல்ல டிரைவரை மகளிர் போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.ஈரோட்டில் தனியார் குழந்தைகள் இல்லம் ஒன்று உள்ளது. இதில், ஆதரவற்ற குழந்தைகளும், வசதி வாய்ப்பில்லாத ஏழை குழந்தைகளும் என 35 பேர் தங்கி, அருகில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த குழந்தைகள் இல்லத்தில் டிரைவராக ஈரோடு மூலப்பாளையம் விவேகானந்தர் தெருவை சேர்ந்த பசுபதி (59) என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி மாலை அந்த இல்லத்தில் தங்கி, 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமி பள்ளி முடிந்து இல்லத்திற்கு வந்துள்ளார். அப்போது சிறுமியை, பசுபதி அங்குள்ள தனி அறைக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  சிறுமியிடம் வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதனால், அச்சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். இச்சம்பவத்திற்கு பிறகு சிறுமியின் நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த, அங்கு பணியாற்றும் கன்னியாஸ்திரி (சிஸ்டர்) ஒருவர், சிறுமியிடம் விசாரித்தபோது, பசுபதி பலாத்காரம் செய்ததை கூறியுள்ளார். இதைக்கேட்டு, அதிர்ச்சியடைந்த கன்னியாஸ்திரி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில், மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி, பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினார். இதையடுத்து போலீசார் பசுபதி மீது போக்சோ, கொலை மிரட்டல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து நேற்று அவரை கைது செய்தனர்.

Related Stories:

>