திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் அரசின் மாதிரி பள்ளியாக அம்மாபட்டி பள்ளி தேர்வு

திருமங்கலம், நவ.27: அம்மாபட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. திருமங்கலம் அருகேயுள்ளது ப.அம்மாபட்டி. இங்கு அரசு உயர்நிலைப் பள்ளி கடந்த 1963ல் துவக்கப்பட்டு, கடந்த 2013ல் மேல்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தற்போது இந்த பள்ளியில் 630 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். 31 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தாண்டு தமிழக அளவில் மொத்தம் 88 பள்ளிகள் மாதிரி பள்ளியாக தமிழக அரசு தேர்வு செய்துள்ளது. இதில் மதுரை மாவட்டத்தில் திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் அம்மாபட்டி அரசு மேல்நிலை பள்ளி, உசிலம்பட்டி கல்வி மாவட்டத்தில் டி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, மதுரை கல்வி மாவட்டத்தில் பாலமேடு அரசு மேல்நிலை பள்ளியும் மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளுக்கு அரசு உடனடியாக ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யும். இதன் மூலமாக பள்ளி வளாகத்தில் கூடுதல் கட்டிடங்கள் கட்டப்படும். மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் வரும் கல்வியாண்டு முதல் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரையில் வகுப்புகள் துவக்கப்பட வேண்டும் என்பது விதிமுறையாகும். எல்கேஜி வகுப்புகளுக்கான சேர்க்கை வரும் கல்வியாண்டிலேயே துவக்கவேண்டும். பள்ளியின் பெயரும் மாதிரி அரசு பள்ளி என மாற்றப்படும்.

இதுகுறித்து அம்மாபட்டி பள்ளி தலைமையாசிரியர் குமரேசன் கூறுகையில், திருமங்கலம் கல்வி மாவட்டத்தில் எங்கள் பள்ளி மாதிரி பள்ளியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்கு காரணம் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களின் ஈடுபடாகும். எங்கள் பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் அனைத்து கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வெற்றிபெறுவர். இதுதவிர கராத்தே, யோகா, ஜூடோ, சிலம்பம் என தனியார் பள்ளிகளுக்கு இணையாக பள்ளியில் மாணவர்களுக்கு படிப்புடன் விளையாட்டும் சொல்லி தரப்படுகிறது. ஒவ்வொரு போட்டிகளிலும் மாணவ, மாணவியர்கள் சாதனை படைத்து வருகின்றனர். ‘மேலும் அரசு மேல்நிலைப் பள்ளியில் அதிகளவு மாணவர்களை கொண்ட பள்ளியும் எங்கள் பள்ளி என்ற பெயரும் உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொது தேர்வுகளில் எங்கள் பள்ளி் 100 சதவீதம் தேர்ச்சியை பெற்று வருகிறது. மாதிரி பள்ளியாக மாறியுள்ளதால் கூடுதல் ஆசிரியர்கள், கூடுதல் கட்டிடங்கள் பள்ளி வளாகத்தில் அமைய வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என்றார்.

Related Stories: