பணிபுரியும் இடங்களில் பெண்களை பாதுகாக்க உள்ளக குழு அமைக்காவிட்டால் அபராதம்: கலெக்டர் எச்சரிக்கை

மதுரை, செப். 25: மதுரை கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, மதுரை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 10 மற்றும் 10க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பணியாற்றக் கூடிய அனைத்து பணி இடங்களிலும் பாலியல் வன்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்-2013 (தடுப்பு, தீர்வு, தடை)ன்படி உள்ளக குழு கட்டாயம் அமைக்க வேண்டும். மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், கூட்டுறவுத் துறை சார்ந்த சங்கம் மற்றும் நிறுவனங்கள், கிராம ஊராட்சிகள், பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவமனைகள், வங்கிகள், காவல் நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், துணிக்கடைகள்,

நகைக்கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், பயிற்சி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், 10 மற்றும் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களிலும் உள்ளக குழு அமைக்கப்பட வேண்டும்.இக்குழுவில் 50 சதவீதம் பெண்கள் இடம் பெற வேண்டும். குழுவில் உள்ள உறுப்பினர்களில் ஒருவர் தொண்டு நிறுவனம், சமூக செயல்பாட்டாளர், சட்ட வல்லுநர்கள், சமூகப் பணி கல்வியாளர்களைக் கொண்டு உள்ளக குழு அமைக்கப்பட்டு அரசு விதிகளின்படி புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும்.

உள்ளக குழு அமைக்காத அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள் மீது பணி இடங்களில் பாலியல் வண்கொடுமையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2013 (தடுப்பு, தீர்வு, தடை)ன்படி ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே, உள்ளக குழு அமைத்த விபரத்தை மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு தெரியபடுத்த வேண்டும் அல்லது dswomadurai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பணிபுரியும் இடங்களில் பெண்களை பாதுகாக்க உள்ளக குழு அமைக்காவிட்டால் அபராதம்: கலெக்டர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: