துறையூர் அருகே 3 கி.மீ தூரம் வரை கற்கள் பெயர்ந்த கரடு முரடான தார்சாலை

துறையூர், நவ.22: துறையூர் அருகே 3 கி.மீ. தூரம் வரை கற்கள் பெயர்ந்து கரடு முரடான சாலையாக சேதமடைந்து கிடப்பதால் இதன் வழியாக செல்லும் வாகனங்களின் டயர்கள் பஞ்சராகி வாகனஓட்டிகளுக்கும் கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. துறையூர் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்தது கிருஷ்ணாபுரம், மருவத்தூர் ஊராட்சிகள். இந்த 2 ஊராட்சிகளுக்கும் இடையே 3 கி.மீ. தூரம் வரை சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மிக மோசமான நிலையில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி தருகிறது. கடந்த 4 வருடத்திற்கு முன்பு இங்கு தார்ச்சாலை புதிதாக போடப்பட்டது.

இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இந்த சாலை முற்றிலும் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மிக மோசமாக பாதிப்படைந்தது. இந்த சாலை வழியாக மருவத்தூர் அம்மம்பாளையம், வேங்கடத்தனூர், செங்காட்டுப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் பள்ளி வாகனங்கள், இருசக்கர வாகனங்களும் அதிகளவில் சென்று வருகின்றன. இதில் மருவத்தூரில் இருந்து ரெங்கநாதபுரம் வழியாக துறையூருக்கு 5 கி.மீக்கு மேல் சுற்றி வரவேண்டும். மேலும் இந்த சாலையை இப்பகுதி மக்கள் குறுக்கு பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த சாலை வழியாக வரும் வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகி பழுதடைவதாக வாகனஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த கரடுமுரடான கற்கள் பெயர்ந்த இந்த சாலையை சீரமைத்து புதுப்பிக்க ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்கள் உள்ளிட்ட வாகனஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories:

>