பாலிஷ் போடுவதாக கூறி 4 பவுன் நகையுடன் வடமாநில வாலிபர் இருவர் மாயம்

திருச்சி, நவ. 22: திருச்சி காந்தி மார்க்கெட் வரகனேரி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சகிலாபானு(52). இவர் மகன், மருமகளுடன் வசித்து வருகிறார்.

நேற்று மகன் வேலைக்கு சென்ற நிலையில் மருமகளுடன சகிலாபானு வீட்டில் இருந்தார். இந்நிலையில் 2 வடமாநில வாலிபர்கள் பாத்திரம் மற்றும் வெள்ளி பொருட்களை பாலிஷ் போடுவதாக கூறி அப்பகுதியில் சுற்றினர். தொடர்ந்து பானு வீட்டிற்கு சென்ற 2 பேரும் குக்கருக்கு பாலிஷ் போட்டு தருவதாக கூறினர். இதையடுத்து வீட்டில் இருந்த பழைய குக்கரை எடுத்து வந்து கொடுத்ததில் பாலிஷ் போட்டு கொடுத்தனர். அதை தொடர்ந்து வெள்ளி கொலுசுவை கொடுத்ததையடுத்து அதனையும் பாலிஷ் போட்டு கொடுத்தனர். இதில் நகை இருந்தால் கொடுங்கள் பாலிஷ் போட்டு தருகிறோம் என கூறியதையடுத்து பானு தான் அணிந்திருந்த 4 பவுன் செயினை கழற்றிக் கொடுத்தார்.

செயினை பெற்ற 2 பேரும் குக்கர் மற்றும் மஞ்சள்தூள் கேட்டு பெற்றனர். குக்கரில் மஞ்சளை போட்டு தண்ணீர் கேட்டனர். இதற்கிடையில் செயினை மறைத்து வைத்த வடமாநில வாலிபர்கள், தண்ணீரை பெற்று குக்கரில் போட்டு மூடி அடுப்பில் வைத்து 5 நிமிடம் லேசாக சூடுபடுத்தி பார்த்தால் பளபளவென இருக்கும் என கூறினர். இதனை நம்பிய பானு, அடுப்பை பற்றவைத்து குக்கரை வைத்தார். இதற்கிடையில் பக்கத்து வீட்டில் நகை பாலிஷ் போடப்போவதாக கூறி அங்கிருந்து மாயமாயினர். தொடர்ந்து 5 நிமிடம் கழித்து குக்கரில் பார்த்தபோது வெறும் மஞ்சள் நீர் மட்டுமே இருந்தது. தொடர்ந்து அப்பகுதி முழுவதும தேடியும் இருவரையும் காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் காந்தி மார்க்கெட் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>