திருச்சி, ஜன.10: திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் மதுகுடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தனியார் பஸ் கண்டக்டர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் லால்குடி உத்தமனூர் பகுதியை சேர்ந்தவர் பிரதாப் சிங் (35). இவர் தனியார் பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வந்தார். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் நேற்று மாலை பிரதாப் சிங் நின்று கொண்டிருந்தபோது, திடீரென ஓடிவந்த ஒருவர் அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் பிரதாப் சிங் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், பிரதாப் சிங் பணிபுரிந்த அதே பேருந்தில் வேலை பார்த்து வந்த டிரைவர்தான் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள டிரைவரை தேடி வருகின்றனர்.அதிகம் மக்கள் வந்து செல்லும் பகுதியான சத்திரம் பேருந்து நிலையத்தில் கண்டக்டர் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
