2ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதியில் 2ம் நாளில் 3வது கட்டமாக 723 ஆண்கள் தேர்வு

திருச்சி, நவ.22: திருச்சியில் 2ம் நிலை ஆண், பெண் காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வில் தேர்வானவர்களுக்கு 3வது கட்ட தேர்வு நடந்து வருகிறது. 2வது நாளில் இதில் 723 ஆண்கள் தேர்வாகினர். தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2ம் நிலை காவலர்கள், தீயணைப்புத்துறை பணிக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தேர்வு நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கு கடந்த 13 முதல் 15ம் தேதி வரை நடத்தப்பட்ட 3 நாட்கள் தேர்வில் மொத்தம் 1,706 பேர் தேர்வாகினர். பெண்களுக்கான காவலர் தேர்வு 9ம் தேதி நடக்க இருந்தது. பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பு வெளியான நிலையில் பெண்களுக்கான உடல் தகுதி தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து வரும் 18 மற்றும் 19ம் தேதிகளில் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டது. அந்த தேர்வு நேற்று திருச்சி சுப்பிரமணியபுரம் ஆயுதப்படை மைதானத்தில் கடந்த 2 நாட்கள் நடந்தது. இந்நிலையில் 2வது கட்ட தேர்வில் தேர்வான ஆண்களுக்கு 3வது கட்ட தேர்வில் 2வது நாள் தேர்வு நேற்று நடந்தது. இதற்காக 906 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில் 891 பேர் கலந்துகொண்டனர். இவர்களுக்கு கயிறு ஏறுதல், 100மீ அல்லது 400மீ ஓட்டம், நீளம் தாண்டுதல் நடத்தப்பட்டது. இதில் 723 பேர் தேர்வாகினர். இன்று பெண்களுக்கு நடத்தப்படும் தேர்வில் கலந்து கொள்ள 785 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன், பெரம்பலூர் எஸ்பி நிஷாபார்த்திபன் ஆகியோர் மேற்பார்வையில் தேர்வு நடத்தப்பட்டது. தொடர்ந்து மாநகர கமிஷனர் அமல்ராஜூம் தேர்வை பார்வையிட்டார்.

Related Stories: