ரூ.50,000 ஹெக்டேர் நெல் சாகுபடி செய்ய இலக்கு மாவட்டத்தில் ரூ.386 கோடி பயிர் கடன் தர நிதி ஒதுக்கீடு

திருச்சி, நவ.22: திருச்சி மாவட்டத்தில் ரூ.50,000 ஹெக்டேர் இந்த ஆண்டு நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார். மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், சத்திரப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தில் கூட்டுறவுத்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கலெக்டர் சிவராசு தலைமையில் சுற்றுப்பயணம் நடந்தது. இதில் கலெக்டர் தெரிவித்ததாவது: திருச்சி மாவட்டம் முழுவதும் கடந்த ஆண்டு விவசாயிகளுக்கு 287 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு (2019-2020) 386 கோடி பயிர் கடன் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவரை 180 கோடி ரூபாய் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதிக்குள் பயிர்கடன் வழங்கப்படும். சத்திரப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் கடந்த ஆண்டு 2 கோடியே 44 லட்சம் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 3 கோடியே 60 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 2 கோடியே 1 லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மாவட்டம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் மூலமாக இதுவரை 61,500 பயனாளிகளுக்கு ரூபாய் 208 கோடி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளது.

சத்திரப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி புதிய கட்டிடம் 2017ம் ஆண்டு ரூ.10 லட்சம் மதிப்பில் குளிர்சாதன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. இது போன்று இதுவரை 15 கட்டிடங்கள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புதிதாக 10 கட்டிடங்கள், முசிறி, தொட்டியம், கல்லக்குடி ஆகிய இடங்களில் கட்டப்படவுள்ளன. திருச்சி மாவட்டத்தில் போதிய அளவு உரம் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக பெய்த மழையினால் 32 மாவட்டங்களில் 17 மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. அதில் 17 மாவட்டங்களில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் சராசரியாக நிலத்தடி நீர் மட்டம் 3 மீட்டர் உயர்ந்துள்ளது என்றார். இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு, துணைப்பதிவாளர் பாலசந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மருததுரை, வேதவள்ளி, சத்திரப்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கித்தலைவர் செல்வம் ஆகியோர் உடன் சென்றனர்.

Related Stories: