அரசின் திட்டங்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும்

தஞ்சை, நவ. 22: தஞ்சை அருகே அம்மாப்பேட்டையில் ராஜராஜசோழன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார்.

அப்போது நிறுவன செயல்பாடுகளை பார்வையிட்டு இயக்குனர்களுடன் கலந்துரையாடினார். இதையடுத்து நிறுவனத்திற்கு இணையதளம் மூலமாக வர்த்தகம் செய்யும் வசதி, இதன்மூலம் விற்பனையை பெருக்கவும் ஆலோசனையை வழங்கினார். அப்போது அவர் பேசும்போது, அரசின் திட்டங்கள் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு கிடைக்க வழிவகை செய்யப்படும். குழு சார்ந்த தொழில்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்த வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும். இந்நிறுவனத்தில் உள்ள அனைத்து பங்குதாரர்களும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார்.

உற்பத்தியாளர் நிறுவன நிர்வாக இயக்குனர் மணிமொழியன் கூறும்போது, ராஜராஜசோழன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் 6 வட்டாரங்களை உள்ளடக்கிய 1,033 பங்குதாரர்களை கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் வேளாண் வணிக துறையின் உதவியுடன் உளுந்து கொள்முதல், நெல் விற்பனை, தரமான விதை நெல், உரங்கள் மற்றும் கரும்பு விற்பனை செய்ததன் மூலம் ரூ.4.5 கோடி நிகர வருமானம் கிடைத்துள்ளது. மேலும் உழுவை மற்றும் அறுவடை இயந்திரங்கள் குறைந்த வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது. நேபெட் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட கொள்முதல் நிறுவனமாக இயங்கி உளுந்து கொள்முதல் செய்ததன் மூலம் உளுந்து விலையை நிலைநிறுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.

வேளாண் விற்பனை மற்றும் விற்பனை துறையின் துணை இயக்குனர் சுரேஷ்பாபு கூறும்போது, நிறுவனத்திற்கு வேளாண் வணிகத்துறை மூலம் ரூ.15.4 லட்சம் மதிப்பிலான உளுந்து மதிப்புக்கூட்டு இயந்திரம் மற்றும் ரூ.60 லட்சம் மதிப்பிலான விதை சுத்திகரிப்பு நிலையம் வழங்கப்பட்டுள்ளது என்றார். இதைதொடர்ந்து கலெக்டர் கோவிந்தராவ், திருமலைசமுத்திரத்தில் உள்ள நவீன அரிசி ஆலையை ஆய்வு செய்தார்.

Related Stories:

>