அலங்காரியூர் பள்ளி ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய கோரி 2ம் நாளாக மாணவர்கள் போராட்டம்

பவானி, நவ. 22: அம்மாபேட்டை அருகே அலங்காரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களையும் இடமாற்றம் செய்ய வலியுறுத்தி இரண்டாம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.சிங்கம்பேட்டை ஊராட்சி, அலங்காரியூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில், சுள்ளிமேடு, அலங்காரியூர், செண்டாபுதூர், சொட்டையனூர், சின்ன சீரங்கனூர், சீலம்பட்டி,  குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 185 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

இப்பள்ளியில் கணித ஆசிரியர் செல்வராஜ் கடந்த 19ம் தேதி வீட்டுப்பாடம் எழுதாத மாணவ, மாணவியரை பிரம்பால் அடித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரணை நடத்திய கல்வித்துறை அதிகாரிகள் செல்வராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர். இதைக்கண்டித்தும், ஆசிரியர்கள் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதால் மாணவ, மாணவியரின் கல்வித்தரம் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, அனைத்து ஆசிரியர்களையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய வலியுறுத்தியும் நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து மாணவ, மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேகோரிக்கையை வலியுறுத்தி நேற்றும் இரண்டாம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பள்ளியில் 185 மாணவ, மாணவியர் படித்து வரும் நிலையில் நேற்று வகுப்புக்கு சுமார் 90 மாணவ, மாணவியர் வந்திருந்தனர். இதற்கிடையே, பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்க சிங்கம்பேட்டை வந்த அமைச்சர் கருப்பணனிடம், மாணவர்கள், பெற்றோர்கள் புகார் மனு அளித்தனர்.அதில், அலங்காரியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆசிரியர்கள் பணியாற்றி வரும் நிலையில் முறையாகப் பாடம் நடத்தாமல் கருத்து வேறுபாடு மற்றும் குழு மனப்பான்மையுடன் செயல்பட்டு வருகின்றனர். இதனால், மாணவ, மாணவியரின் கல்வித் தரம் பாதிக்கப்பட்டு வருகிறது. கல்வி வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் ஆசிரியர்கள் மீது காழ்ப்புணர்ச்சியுடன் நடந்து கொள்வதோடு, தவறான தகவல்களை பெற்றோர்கள் மத்தியில் சக ஆசிரியர்கள் பரப்பி வருகின்றனர். இதனால், பள்ளி மீதான நம்பிக்கை குறைந்து வருகிறது.எனவே, இப்பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களையும் வெவ்வேறு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்து நடவடிக்கை எடுப்பதோடு, கல்வியில் அக்கறையுடன் செயல்படும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

புகார் மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் கருப்பணன், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மாணவர்கள் இரண்டாம் நாளாக வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தியதால் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

Related Stories: