5,8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அரசாணையை திரும்பப்பெற வலியுறுத்தி ஜன.4ல் போராட்டம் ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு

ராமேஸ்வரம், நவ.20:  துவக்கப் பள்ளிகளில் 5, 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தும் தமிழக அரசாணையை திரும்பப்பெற வலியுறுத்தி ஜன.4ல் போராட்டம் நடத்தி ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  ராமேஸ்வரத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் மணிமேகலை தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் முத்துமுருகன் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் மயில், பொருளாளர் ஜோதிபாபு, துணைப் பொதுச்செயலாளர் கணேசன், எஸ்டிஎப்ஐ பொதுக்குழு உறுப்பினர் மோசஸ் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை கண்காணித்தல், 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தல் உள்ளிட்ட அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். ஈஎம்ஐஎஸ் புள்ளி விவரங்கள் உள்ளிட்ட இணையதள பணிகளை மேற்கொள்வதற்கு வட்டார அளவில் ஊழியர்கள் நியமிக்க வேண்டும். பல்வேறு போராட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது அரசு மேற்கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கையை தமிழக அரசு கைவிடவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானங்களை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி டிசம்பர் 3, 4 மற்றும் 5ம் தேதிகளில் பிரச்சார இயக்கம் மற்றும் வட்டார கல்வி அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு நடத்தவும், ஜன.4ம் தேதி மாவட்ட அளவில் பெரும் தர்ணா போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை, தேசிய கல்விக்கொள்கை-2019ஐ திரும்ப பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.8ம் தேதி மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் ஒருநாள் அகில இந்திய வேலை நிறுத்த போராட்டத்தில் ஆசிரியர் கூட்டணி சார்பில் பங்கேற்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.   

Related Stories: