சேலத்தில் கழுத்தை அறுத்து மனைவி கொலை கணவரிடம் 3 நாள் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

சேலம், நவ.20: சேலத்தில் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்த வழக்கில்  கோர்ட்டில் சரண் அடைந்த கணவரை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.சேலம் மன்னார்பாளையம் போயர் தெருவை சேர்ந்தவர் கோபி(29). இவரது மனைவி மோகனேஸ்வரி. இவர்களுக்கு 4ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு குழந்தை இருக்கிறது. கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக கோவையில் இருந்த மோகனேஸ்வரி, கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். குடும்பம் நடத்த வருமாறு அழைத்தும் மோகனேஸ்வரி மறுத்துவிட்டார். பெற்றோர் வீட்டில் இருந்து, சேலம் டவுன் பகுதியில் உள்ள ஜவுளிகடையில் வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த 10ம்தேதி இரவு அல்லிக்குட்டை கங்காபுதூரில் மோகனேஸ்வரி கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். குடும்பம் நடத்த வரமறுத்ததால் கணவன் கோபியே நண்பர்கள் துணையுடன் மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்தது தெரியவந்தது. கோபி கோவை கோர்ட்டில் சரண் அடைந்த நிலையில் அவரது நண்பர்கள் விஜி, காளியப்பன், வீராங்கன், மோகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இதில் சரண் அடைந்த கோபியை காவலில் எடுத்து விசாரிக்க அம்மாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி, சேலம் 2வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து கோபியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதித்துறை நடுவர் சிவா, உத்தரவிட்டார். இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: