நீலகிரி ஊராட்சி ஸ்டாலின் நகரில் இலவசமாக வழங்கிய வீட்டுமனை பட்டாவுக்கு சிட்டா அடங்கல் வழங்க வேண்டும்

தஞ்சை, நவ. 19: நீலகிரி ஊராட்சி ஸ்டாலின் நகரில 138 பேருக்கு இலவசமாக வழங்கி வீட்டுமனை பட்டாவுக்கு சிட்டா அடங்கல் வழங்கி பதிவேற்றம் செய்ய வேண்டுமென தஞ்சையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர். தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார். தஞ்சை எம்எல்ஏ நீலமேகம் தலைமையில் நீலகிரி ஊராட்சி ஸ்டாலின் நகரவாசிகள் அளித்த மனு: தஞ்சை அருகே நீலகிரி ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்டாலின் நகரில் கடந்த 15.8.1977 முதல் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவசமாக 138 பேருக்கு வழங்கிய இடத்தில் குடியிருந்து வருகிறோம். குடியிருந்து வரும் வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு விண்ணப்பம் செய்யும்போது சிட்டா அடங்கலில் பட்டா பதிவேற்றம் செய்யவில்லையென நீலகிரி கிராம நிர்வாக அலுவலகத்தில் கூறி விண்ணப்பத்தை நிராகரித்து விட்டனர். எனவே இலவசமாக வழங்கப்பட்ட அனைத்து வீட்டுமனை பட்டாவுக்கும் சிட்டா அடங்கல் வழங்கி கிராம கணக்கில் பதிவேற்றம் செய்து தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதலீடு செய்த பணத்தை பெற்றுத்தர வேண்டும்: பட்டுக்கோட்டை அருகே மஞ்சவயல் தாமரங்கோட்டை தெற்கு, கருங்குளம் கிராம மக்கள் அளித்த மனுவில், பட்டுக்கோட்டையில் இயங்கி வந்த பெர்பெக்ட் அக்ரோ பார்ம் நிறுவனத்தை கழுகப்புளிக்காட்டை சேர்ந்த குழந்தைசாமி மகன் பன்னீர்செல்வம் மற்றும் சுந்தரநாயகிபுரம் மங்கணங்காடு கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் மனைவி கமலம் இருவரும் சேர்ந்து நடத்தி வந்தனர். இதில் எங்கள் ஊரை சேர்ந்த பாலையன் மகள் அனுராதா, சுந்தரநாயகிபுரம் மங்கணங்காடு கிராமத்தை சேர்ந்த வீராச்சாமி மகள் சுதா இருவரும் ஏஜெண்டாக இருந்தனர். இவர்கள் மூலம் எங்கள் பகுதிவாசிகளிடமிருந்து ரூ.50 லட்சம் முதலீடாக பெற்றனர். ஆனால் நாங்கள் செலுத்திய தொகை இதுவரை எங்களுக்கு திரும்ப வழங்கவில்லை. ஆனால் எங்களிடமிருந்து பெற்ற தொகையை கொண்டு 2 எக்டேருக்கு மேல் தென்னந்தோப்பு, பல லட்சம் மதிப்புள்ள மாடி வீடுகள், கார், பைக் என சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். பல முறை முதலீடு செய்த பணத்தை திரும்ப கேட்டும் அவர்கள் அலைகழிக்கின்றனர். எனவே நிறுவன உரிமையாளர் மற்றும் ஏஜென்டுகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நாங்கள் முதலீடு செய்த தொகையை மீட்டுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

வீடு கட்டி கொடுக்க நடவடிக்கை: பாபநாசம் தாலுகா பிராந்தை அம்பலக்கார தெருவை சேர்ந்த மயிலம்பாள் அளித்த மனுவில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் வீடு ஒதுக்கீடு பெற்றேன். இதையடுத்து சென்றாண்டு கஜா புயல் வீசியபோது கம்பி மட்டும் அடித்தளம் எழுப்பப்பட்டு கம்பி ஊன்றி நிறுத்தினோம். ஆலங்குடி ஊராட்சி செயலாளர் நீலமேகம் முதல் தவணையான ரூ.26 ஆயிரம், 2வது தவணையான ரூ.26,500 என மொத்தம் ரூ.52500ஐ வங்கியிலிருந்து எடுத்து தர சொல்லி வலியுறுத்தினார்.

இதையடுத்து என்னிடமிருந்து பணத்தை பெற்று கொண்டார். ஆனால் இதுவரை கட்டிடத்தை கட்டவில்லை. எனவே எனது வீட்டை ஊராட்சி செயலாளர் நீலமேகம் கட்டி கொடுக்க வேண்டும் அல்லது பணத்தை திரும்ப அளிக்க வேண்டும். இல்லையென்றால் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

காலதாமதமாக வந்த

அதிகாரிகளுக்கு டோஸ்

தஞ்சை கலெக்டராக கோவிந்தராவ் நேற்று காலை பொறுப்பேற்று கொண்டார். நேற்று திங்கட்கிழமை என்பதால் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு முன்னதாக அனைத்துத்துறை அலுவலர்களுடன் தனது கூட்டரங்கில் கலந்தாலோசனையில் கலெக்டர் ஈடுபடுவது வழக்கம். அதுபோல் கலெக்டர் கோவிந்தராவ், பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு முன்னதாக அனைத்து துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனையில் ஈடுபட்டார். அப்போது கூட்டத்துக்கு சில அதிகாரிகள் காலதாமதமாக வந்தனர். இதை கண்டு கோபமடைந்த கலெக்டர் கோவிந்தராவ், இனி என்னுடைய கூட்டத்துக்கு வர வேண்டிய அலுவலர்கள் சரியான நேரத்துக்கு வர வேண்டும். நான் கூட்டத்தை துவங்கிய பின்னர் காலதாமதமாக அலுவலர்கள் உள்ளே வரக்கூடாது. அதேபோல் கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது வெளியே செல்லவும் கூடாது என உத்தரவிட்டார். கலெக்டர் வந்த முதல் நாளே அதிகாரிகளை கடிந்து கொண்டதால் அனைத்துத்துறை அதிகாரிகளும் கிலியில் உள்ளனர்.

15 பேருக்கு முதியோர் உதவித்தொகை

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு கலெக்டர் கோவிந்தராவ் தலைமை வகித்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக்கடன் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 601 மனுக்களை பெற்று கொண்டார். பின்னர் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தை மனுதாரருக்கு தெரிவிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் கும்பகோணம் தாராசுரத்தை சேர்ந்த சரவணக்குமார் சந்திரசேகரன் சவுதி அரேபியாவில் பணியில் இருந்தபோது இறந்ததையடுத்து அவருக்கு சேர வேண்டிய சட்டப்படியான நிலுவைத்தொகை ரூ.4.27 லட்சத்துக்கான காசோலையை அவரது மனைவி சரிதாவுக்கு வழங்கினார். மேலும் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் 15 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 3 பேருக்கு விதவை உதவித்தொகை, ஒருவருக்கு முதிர்கன்னி உதவித்தொகை, ஒப்பந்த அடிப்படையில் ஒருங்கிணைந்த சேவை மையம், மகிளா சக்தி கேந்தரா ஆகிய மையங்களில் பணிபுரிய 6 பேருக்கு பணி நியமன ஆணை, மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 5 பேருக்கு காதொலி கருவியை கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார்.

Related Stories: