அனுமதியின்றி பைப் லைன் அமைத்து வறட்டாறு ஓடையில் கழிவுநீர் கலப்பு

குஜிலியம்பாறை, நவ.14: குஜிலியம்பாறையில் நெடுஞ்சாலைத்துறை அனுமதியின்றி பைப்லைன் அமைத்து ஓட்டலில் இருந்து வெளியேரும் கழிவு நீர் முழுவதும், மெயின்ரோட்டில் உள்ள வறட்டாற்று ஓடையில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதி குடியிருப்பு மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குஜிலியம்பாறையில் வட்டார கல்வி அலுவலகம் அமைந்துள்ள மெயின் ரோட்டில் தனியாருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் இருந்து கழிவு நீர் வெளியேறுவதற்கு முறையான வசதி செய்யவில்லை. இதனால் ஓட்டல் நிர்வாகத்தினர், கழிவு நீர் வெளியே செல்வதற்காக, அருகிலுள்ள வறட்டாறு ஓடை வரை மெயின் ரோட்டில் பள்ளம் தோண்டி பைப் லைன் அமைத்துள்ளனர். வறட்டாற்றில் கழிவு நீரை வெளியேற்றுகின்றனர். மெயின் ரோட்டின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டுவதற்கு நெடுஞ்சாலைத்துறையிடம் எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை. இந்த வறட்டாறு ஓடை அமைந்துள்ள மெயின் ரோட்டின் எதிரே குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், போலீஸ் ஸ்டேசன் மற்றும் குடியிருப்புகளும், கடைகளும் உள்ளது.

இந்நிலையில் ஓட்டல் கழிவு நீர் முழுவதும் இந்த வறட்டாற்றில் தேங்கியபடியே உள்ளதால், இதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியபடி உள்ளது. மேலும் அதிகளவில் கொசுக்கள் உற்பத்தியாகிறது. இதனால் இப்பகுதி மக்கள் ஒருவித தொற்று நோய் அச்சத்திலேயே இருந்து வருகின்றனர். மேலும் மழை பெய்யும் நாட்களில் இந்த வறட்டாற்றில் ஓடும் மழைநீரில், இந்த கழிவு நீரும் கலந்தபடி செல்கிறது. எனவே மெயின்ரோட்டில் அனுமதியின்றி போடப்பட்ட பைப்லைனை அகற்றி, வறட்டாற்றில் கழிவு நீர் தேங்கி நிற்காமல் இருக்க பாளையம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>