நட்டாற்றீஸ்வரர் கோயில் செல்ல பாலம் கட்டியும் தடுப்புசுவர் இல்லாததால் ஆபத்தான பயணம்

ஈரோடு, நவ.14: ஈரோடு அருகே காங்கேயம்பாளையம் நட்டாற்றீஸ்வரர் கோயிலுக்கு செல்ல காவிரி ஆற்றின் குறுக்கே 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. ஆனால், பாலத்தின் இருபுறமும் தடுப்புசுவர் இல்லாததால் ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. ஈரோட்டில் இருந்து கரூர் செல்லும் ரோட்டில் சாவடிப்பாளையம் புதூரில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் காங்கேயம்பாளையத்தில் காவிரி ஆற்றின் நடுவே நட்டாற்றீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலுக்கு ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், நாமக்கல் மாவட்டத்தில் இருந்தும் அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள இந்த கோயிலில் தண்ணீர் வரும் நாட்களில் பரிசல் மூலமாகவும், தண்ணீர் இல்லாத காலங்களில் நடந்து சென்றும் சாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக ஆடிபெருக்கு விழா, சித்ரா பவுர்ணமி மற்றும் விடுமுறை நாட்களில் அதிகமாக பக்தர்கள் வந்து செல்கின்றனர். இரு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகமாக வந்து செல்லும் இந்த கோயிலுக்கு பக்தர்கள் சிரமமின்றி வந்து செல்லும் வகையில் கோயிலுக்கும், கரைப்பகுதிக்கும் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் கட்டப்பட்டது. ஆனால், பாலத்தின் பக்கவாட்டில் தடுப்புசுவர் அமைக்கப்படாமல் கம்பியை மட்டுமே வைத்துள்ளனர். இந்த பாலம் திறப்பு விழா நடந்து பயன்பாட்டில் உள்ள நிலையில் தடுப்புசுவர் இல்லாததால் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. குழந்தைகள் பாலத்தின் வழியாக வரும்போது தவறி கீழே விழுந்து விடும் அபாயமும் உள்ளது. பாலத்தில் பயணம் செய்யும் வாகன ஓட்டுகளும் தடுமாறி வருகின்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கூறியதாவது: காவிரி ஆற்றின் நடுவே அமைந்துள்ள இந்த நட்டாற்றீஸ்வரர் கோயிலில் ஆற்றில் தண்ணீர் வரும் காலங்களில் பூஜை செய்யக்கூட செல்ல முடியாத நிலை இருந்து வந்தது. பரிசல் மூலம் சென்றாலும் ஆபத்தான நிலையில் பயணம் மேற்கொள்ள வேண்டி இருந்தது. தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது பாலம் கட்டி உள்ளனர். பாலத்தில் ஒரு லாரி மட்டும் செல்லும் வகையிலும், இரண்டு கார் செல்லும் வகையிலும் இந்த பாலம் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளது. ஆனால், பாலத்தில் தடுப்புசுவர் கட்டாமல் தடுப்பு கம்பி  வைத்துள்ளனர். மேலும், பக்கவாட்டில் எந்த வித பாதுகாப்பும் செய்யப்படவில்லை. வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்தால் ஆற்றிற்குள் விழ வேண்டியது தான். குழந்தைகளை அழைத்து வரும்போது ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் நிலை உள்ளது. பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த பாலத்தில் தடுப்புசுவர் இல்லாததால் பீதியுடன் செல்ல வேண்டியது உள்ளது. எனவே, பாலத்தின் பக்கவாட்டில் தடுப்புசுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: