மெதுவாக செல்கிறது அணை தண்ணீர் மஞ்சளாறு ஆற்றோரம் கால்வாய் கட்ட வேண்டும்

வத்தலக்குண்டு, நவ. 13: மஞ்சளாறு அணையில் 28 அடி உயரத்திற்கு வண்டல் மண் படிந்திருப்பதால் திறந்து விடப்பட்ட தண்ணீர் மெதுவாக செல்கிறது. எனவே ஆற்றையொட்டி சிமெண்ட் கால்வாய் கட்ட வேண்டும் என வத்தலக்குண்டு பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வத்தலக்குண்டு நஞ்சை பட்டாதாரர்கள் சங்க விவசாயிகள் கூட்டம் நடந்தது. தலைவர் சண்முகநாதபாண்டியன் தலைமை வகிக்க,  செயலாளர் முன்னாள் பேரூராட்சி தலைவர் ராம்தாஸ் முன்னிலை வகித்தார். தமிழக விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச்செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார்.கூட்டத்தில் மஞ்சளாறு அணையின் மொத்த கொள்ளளவு 57 அடி ஆகும். அதில் தற்போதைய இருப்பு 55 அடி அதில் வண்டல் மண் மட்டும் 28 அடி உயரத்திற்கு படிந்துள்ளது. பாஸ்கல் விதிப்படி வண்டல் மண் இருப்பதால் விவசாயிகளுக்கு திறந்து விடப்பட்டுள்ள 60 கனஅடி தண்ணீர் மெதுவாக செல்கிறது. இதனால் இதுவரை பாசன தண்ணீர் கடைமடையை அடையவில்லை. ஆற்றிலேயே பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதால் அதிகளவில் தண்ணீரை மண் உறிஞ்சி விடுகிறது.

ஆகையால் அணையிலிருந்து ஆற்றையொட்டி சிமெண்ட் கால்வாய் அமைத்து தண்ணீரை பாசனத்திற்கு திறந்து விடவேண்டும். கோடை காலத்தில் அணையில் தண்ணீர் வற்றி இருக்கும் போது அணையில் படிந்துள்ள வண்டல் மண்ணை அகற்ற விவசாயிகளுக்கு இலவசமாக தருவதாக அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் விவசாயிகள் அவர்கள் செலவிலேயே வண்டல் மண்ணை வெளியேற்றி விடுவார்கள். அணையில் கூடுதலாக தண்ணீர் தேங்கி நிற்கும் என்றும் வைகை அணையிலிருந்து வரும் பெரியார் சிமெண்ட் கால்வாயிலிருந்து  தண்ணீர் சென்று குன்னுவாரன்கோட்டை கண்மாய் ஆலங்குளம் கண்மாய் ஆகியவற்றை நிரப்பி விடுகிறது. அதேபோல பழையவத்தலக்குண்டுவில் உள்ள பெரியகண்மாய் வேடகுளம் கண்மாய் ஆகியவற்றை நிரப்ப ராமநாயக்கன்பட்டி அருகே செல்லும் பெரியார் சிமெண்ட் கால்வாய் வைகை தண்ணீரை அங்கிருந்து சிமெண்ட் குழாய்கள் மூலம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் வத்தலக்குண்டு, பழையவத்தலக்குண்டு, குன்னுவாரன்கோட்டை உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். சங்க பொருளாளர் மணிபாரதி நன்றி கூறினார்.

Related Stories:

>