மாறிவரும் உணவுப்பழக்கத்தால் மலைவாழ் மக்களுக்கு ரத்த சோகை அதிகரிப்பு

ஈரோடு, நவ.12: மாறிவரும் உணவு பழக்க வழக்கம், இயற்கை உணவு, காய்கறிகள் தவிர்ப்பு உள்ளிட்ட காரணங்களால் மலைவாழ் மக்களுக்கு ரத்த சோகை பாதிப்பு அதிகரித்து வருவது மருத்துவ முகாமில் கண்டறியப்பட்டுள்ளது. பர்கூர் மேற்கு மலைப்பகுதிக்கு உட்பட்ட கொங்காடை கிராமத்தில் ஈரோடு டிரஸ்ட் மருத்துவமனை மற்றும் சுடர் தொண்டு நிறுவனம் சார்பில் நேற்று முன்தினம் இலவச மருத்துவ முகாம் நடந்தது.  இம்முகாமில் கொங்காடை, பெரியசெங்குளம், சின்னசெங்குளம், ஓசூர் உள்ளிட்ட சுற்று வட்டார மலைக்கிராமங்களை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் கலந்து கொண்டனர்.  முகாமில் கலந்து கொண்ட ஆண், பெண், வயது வித்தியாசம் இன்றி அத்தனைபேருக்கும் ரத்த சோகை பாதிப்பு இருப்பது கண்டு மருத்துவக் குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். ரத்த சோகைக்கு அடுத்தபடியாக மலைவாழ் மக்களுக்கு தோல்நோய் பாதிப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து டாக்டர்கள் குழுவினர் கூறியதாவது:

Advertising
Advertising

ரத்தசோகை பாதிப்புக்கு முக்கிய காரணம் மலைவாழ் மக்களின் மாறி வரும் உணவு பழக்க வழக்கம் மற்றும் காய்கறி, கீரைகளை புறம்தள்ளியது தான். இயற்கையாக மலைப்பகுதிகளில் விளையும், ராகி, கேள்வரகு, தினை உள்ளிட்டவைகளை வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டுமே பயன்படுத்தி விட்டு ரேஷன் அரிசியை அதிகளவில் பயன்படுத்த தொடங்கி உள்ளனர். பருப்பு வகைகள் தவிர்க்கப்பட்டுள்ளது.மேலும் காய்கறிகள், கீரை வகைகளை அறவே ஒதுக்கி இருப்பதும் முக்கிய காரணமாகும். காய்கறிகள், கீரை வகைகளினால் உடல் ஆரோக்கியத்திற்கு என்னென்ன பயன்கள் உள்ளது என்ற விழிப்புணர்வு இல்லை. இதேபோல தோல் நோய் பாதிப்பு அதிகளவில் உள்ளது.  ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ குறைந்தது வசிக்கும் அறையின் அளவான 10க்கு 10 இருக்க வேண்டும். ஆனால், மலைக்கிராமங்களில் 10க்கு 10 வீட்டில் குறைந்த பட்சம் 6 பேர் வரை வசிக்கின்றனர். மேலும் தன்சுத்தம் இல்லாமல் இருப்பதும் தோல் நோய்க்கு முக்கிய காரணமாக உள்ளது. மலைக்கிராமங்களில் சிகிச்சையை விட கவுன்சலிங் வழங்குவது தான் முக்கியமானதாக உள்ளது. இவ்வாறு டாக்டர்கள் கூறினர்.

Related Stories: