சேலம் பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 கொள்ளையர்கள் கைது

ராசிபுரம், நவ.7:  நாமக்கல், சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 கொள்ளையர்களை கைது செய்த ராசிபுரம் போலீசார், அவர்களிடம் இருந்து 27.5 சவரன் நகை மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் மேட்டுத்தெருவை  சேர்ந்தவர் சக்ரவர்த்தி மனைவி சங்கீதா. கடந்த 14.08.19 அன்று மாலை, மினிஸ்டர் கோவிந்தசாமி தெருவில் நடந்து சென்றபோது, பைக்கில் வந்த வாலிபர்கள், அவர் அணிந்திருந்த  6 சவரன் தாலிக்கொடியை பறித்துக் கொண்டு தப்பியோடினர். மறுநாள் காலை, நாமக்கல்-திருச்செங்கோடு சாலை, அய்யம்பாளையம் முருகன் கோயில் எதிரில் நடந்த சென்ற போதுப்பட்டியை சேர்ந்த மனோகரன் மனைவி ரமீலாவிடம்  7 சவரன் தாலிக்கொடியை பறித்து சென்றனர். கடந்த மாதம் 9ம் தேதி, வெண்ணந்தூர் அருகே, நெ.3 கொமாரபாளையத்தை சேர்ந்த ஜீவானந்தம் மனைவி ரேணுகா, மயில் நகர் பகுதியில் நடந்து சென்ற போது மூன்றரை சவரன் செயினை பைக் கொள்ளையர் பறித்து சென்றனர். அதேபோல், கடந்த மாதம் 28ம் தேதி வேலகவுண்டம்பட்டி எர்ணாபுரத்தை சேர்ந்த ரவி மனைவி கலைச்செல்வி, நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில்  நடந்து சென்ற போது, பைக்கில் வந்த வாலிபர்கள் 6 சவரன் தாலிக்கொடியை பறித்து சென்றனர்.

Advertising
Advertising

இதுகுறித்து புகார்களின் பேரில், இன்ஸ்பெக்டர்கள்(ராசிபுரம்)செல்லமுத்து, (நல்லிபாளையம்) கைலாசம், (வெண்ணந்தூ)விஜயகுமார், (வேலகவுண்டம்பட்டி) தங்கவேல் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில், ராசிபுரம் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து மற்றும் போலீசார்,  சி.எஸ்.புரம்-அணைப்பாளையம் சந்திப்பில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பதிவெண் இல்லாத பைக்கில் வந்த இருவர், போலீசாரை கண்டதும் திரும்பி செல்ல முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவர்களை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அவர்கள் சேலம் கிச்சிபாளையம் எஸ்எம்சி காலனியை சேர்ந்த அருணாச்சலம்(21), கஸ்தூரிபா தெருவை சேர்ந்த சரவணன் மகன் பிரபு (எ) போண்டா பிரபு (21) என்பது தெரியவந்தது. மேலும், இருவரும் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், சேலம் மாவட்டம் ஓமலூர், தீவட்டிப்பட்டி பகுதிகளில் தனியாக நடந்து சென்ற பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 27.5 சவரன் நகைகள் மற்றும் செயின் பறிப்பில் ஈடுபட பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பைக் கொள்ளையர்களை கைது செய்து, நகைகளை மீட்ட இன்ஸ்பெக்டர் செல்லமுத்து மற்றும் தனிப்படை போலீசாரை, நாமக்கல் மாவட்ட எஸ்பி அருளரசு பாராட்டினார்.

Related Stories: