கீதா ஞான யக்ஞம் ‘பக்தி யோகம்’ சொற்பொழிவு

வேலூர், நவ.6: வேலூர் சின்மயா மிஷன் சார்பில் கீதா ஞான யக்ஞம் ‘பக்தி யோகம் சொற்பொழிவு நிகழ்ச்சியில் பகவத்கீதை 12வது அத்தியாயத்தை கோவை சின்மயா மிஷன் ஸ்வாமி அனுகூலானந்தா சொற்பொழிவாற்றினார்.1953ம் ஆண்டு சின்மயாநந்தரின் பக்தர்கள் சென்னையில் ஒன்றுகூடி ஆன்மிக பணியாற்ற சின்மயா இயக்கத்தை தொடங்கினர். இந்த இயக்கம் நாடு முழுவதும் ஞான யக்ஞம் என்ற  மத் பகவத் கீதை உள்ளிட்ட பக்தி நூல்களைக் கொண்டு சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நிகழ்த்தி வருகிறது

உலகளவில் 3 முதல் 16 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு ஒது-படி-அறி-கடைபிடி என்று கீதை ஓதுதல் போட்டி நடத்தப்படுகிறது. சின்மயா மிஷன் குடும்பத்தில் உள்ள பாலகர்கள் தொடங்கி அனைவரும் இணைந்து நமது கலாச்சாரத்தை ஆன்மீகத்துடன் அறிமுகப்படுத்துகிறது.

இது சின்மயா மிஷனின் 300 ஆன்மிக மையங்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. சின்மயா மிஷன் மூலம் 100 கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகம் இயங்குகிறது. வேலூரில் சின்மயா மிஷன் ‘சரஸ்வதி கலாகேந்திரா’ காந்திநகர் கிழக்கு பகுதியில் செயல்பட்டு வருகிறது. அதன்படி, வேலூர் சின்மயா மிஷன் சார்பில் கீதா ஞான யக்ஞம் ‘பக்தி யோகம்’ 4 நாள் சொற்பொழிவு நிகழ்ச்சி வேலூர் அண்ணாசாலையில் உள்ள லஷ்மி கார்டன் பள்ளியில் நேற்று முன்தினம் தொடங்கியது. மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை நடந்த ஆன்மிக நிகழ்ச்சியில் மத் பகவத்கீதை 12வது அத்தியாயம் குறித்து சொற்பொழிவு நடத்தப்பட்டது. ஆன்மிக நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான நேற்று ஸ்வாமி அனுகூலானந்தா தலைமை தாங்கி பகவத்கீதை 12வது அத்தியாயம் குறித்து சொற்பொழிவாற்றினார்.

இதில், இறைவனின் பேரன்புக்கான குணநலன்கள் என்ன? இறை பக்தியை வளர்ப்பது எப்படி, வாழ்க்கையில் ஏற்படும் கடினமான சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறுவது எப்படி, தியான நிலையை அடைவது எப்படி? பகவத்கீதை எத்தகைய கேள்விகளுக்கு பதிலளிக்கிறது, என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு ஸ்வாமி அனுகூலானந்தா சொற்பொழிவின் மூலம் எடுத்துரைத்தார். இதில், சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: