நீர்வரத்தின்றி தேங்கிக் கிடக்கும் தண்ணீர் ஏரி முழுவதும் பாசி படர்ந்த அவலம் துர்நாற்றத்தால் சுகாதார சீர்கேடு அபாயம்

இடைப்பாடி, நவ.5:  இடைப்பாடி அருகே பெரிய ஏரிக்கு சுத்தமாக நீர்வரத்து இல்லாத நிலையில், தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் பாசி படர்ந்து காணப்படுவதால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இடைப்பாடி பெரிய ஏரிக்கு ஏற்காடு அடிவாரத்தில் பெய்யும் மழையால் நீர்வரத்து வருகிறது. இந்த நீர்வரத்தானது ஓமலூர், தாரமங்கலம், சின்னம்பம்பட்டி, சமுத்திரம், புதுப்பாளையம், தாராபுரம், ஆவனியூர், நைனாம்பட்டி, சரபங்கா ஆறு வழியாக பெரிய ஏரிக்கு தண்ணீர் வருகிறது. இந்நிலையில், நீர்வழித்தடம் ஆக்கிரமிப்பு காரணமாக நீர்வரத்து தடைபட்டுள்ளது. நீர்வரத்து கால்வாய்களில் செழித்து வளர்ந்த சீமை கருவேல மரங்கள், கல்குவாரிகளின் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் நீரவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. தற்போது, பெய்த மழையால், ஏரிக்கு கழிவுநீருடன் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், கடும் துர்நாற்றம் வீசுகிறது. ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் சீமை கருவேல மரங்களை அகற்றினால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். எனவே, இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: