சாயல்குடி அருகே கரும்புகை, பறக்கும் தூசுகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

சாயல்குடி. நவ.1:  தூத்துக்குடி-நாகப்பட்டிணம் கிழக்கு கடற்கரை சாலை ராமநாதபுரம் மாவட்டம் வழியாக செல்கிறது. சாயல்குடி முதல் ராமநாதபுரம் வரையிலான சாலையின் முக்கிய இடமாக சாயல்குடி உள்ளது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள், மாணவர்கள், அலுவலர்கள் வந்து செல்கின்றனர். இச்சாலையில் பல்வேறு வெளி மாவட்டங்களிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகளும், ஆன்மீக யாத்தீரிகளும் ராமேஸ்வரம், திருப்புல்லானி, தேவிபட்டிணம், திருஉத்திரகோசமங்கை, ஏர்வாடி போன்ற ஆன்மீக ஸ்தலங்களுக்கு வந்து செல்கின்றனர்.

இதுபோன்று திருச்செந்தூர், கன்னியாகுமரி, குற்றாலம், சபரிமலை செல்வதற்கு பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். மேலும் வாலிநோக்கம் அரசு உப்பளம், ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் சாயல்குடி கடற்கரை பகுதிகளிலிருந்து மீன்களும், கடலாடி பகுதியிலிருந்து மரக்கரிகள், பனைமர பொருட்களை ஏற்றிக்கொண்டு வாகனங்கள் பிற மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் செல்கிறது. அதிகமான கனரக வாகனங்கள்,  அரசு பேருந்துகள், பள்ளி, கல்லூரி பேருந்துகள் என வாகனங்களால் இச்சாலையில் போக்குவரத்து அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் இச்சாலையில் உள்ள தார் கலவை பிளான்ட்டில் இருந்து பறக்கும் தூசி தங்களை பாதிப்பதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இதுபற்றி உறைகிணறு தங்கம் கூறுகையில், ‘‘ இங்கு அமைக்கப்பட்டுள்ள தார், ஜல்லி கலவை பிளான்ட்டிலிருந்து வெளியேறும் கரும்புகை, தூசு துகளால் கிராமமக்கள் அவதிப்பட்டு வருகின்றோம். இதுபற்றி பலமுறை புகார் தெரிவித்துள்ளோம்.   இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கண்களில் தூசுகள் பட்டு, கண்ணை கசக்கும் போது, எதிரே வரும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே கிராமமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருக்கும் தார் பிளான்ட்டை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: