மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் விபத்து ஏற்படுத்தும் பல்லாங்குழி சாலை அதிகாரிகள் கவனிப்பார்களா?

பரமக்குடி, நவ.1:  பரமக்குடியில் உள்ள மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளி மாணவ,மாணவிகள்  கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். பரமக்குடி நகர் பகுதியில் மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு செல்கிறது. தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் கல்லூரி, பள்ளி மற்றும் வியாபார நிறுவனங்கள் உள்ளன. பரமக்குடி புறநகர் பகுதியில் நான்கு வழிச்சாலை அமைக்க பட்டிருந்தாலும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பரமக்குடி நகர் பகுதிகுள் வந்து செல்கிறது.

பள்ளிக்கு வரும் மாணவ,மாணவிகள் மற்றும் வியாபார நிறுவனங்களுக்கு வரும் பொதுமக்களும் பெரும்பாலும் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், சாலைகள் முழுவதும் சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சேதமடைந்த சாலைகளில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

பள்ளிக்கு வரும் மாணவ,மாணவிகள் சைக்கிள் ஓட்ட முடியாமல் மேடுபள்ளங்களில் விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். சாலை ஓரங்களில் நடந்து செல்லும் பாதசாரிகள் மீது வாகனங்கள் சேற்றை வாரி இறைத்து செல்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Related Stories: