அறந்தாங்கி அருகே காட்டாற்றை உயிர் பயத்தில் கடந்து செல்லும் மாணவர்கள் பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

அறந்தாங்கி, நவ.1: அறந்தாங்கி அருகே பாலம் இல்லாததால், காட்டாற்றை ஆபத்துடன் மாணவ, மாணவியர் கடந்து செல்ல வேண்டி உள்ளது. எனவே அப்பகுதியில் பாலம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அறந்தாங்கியை அடுத்த பெருங்காடு அரசு உயர்நிலைப்பள்ளியில் 452 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்கள் நாகுடி, பெருங்காடு, மேல்மங்கலம், கூத்தங்குடி, பள்ளத்திவயல், இடையன்கோட்டை பகுதிகளில் இருந்து பள்ளிக்கு படிக்க வந்து செல்கின்றனர். இந்த பள்ளிக்கு பெரும்பாலான மாணவ, மாணவியர் பெருங்காடு பகுதியில் இருந்து நடந்தும், சைக்கிளிலும் சென்று வருகின்றனர். பெருங்காட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் வழியில் நரசிங்ககாவேரி காட்டாற்றை மாணவ, மாணவியர் கடந்து செல்ல வேண்டும். இந்த காட்டாற்றின் குறுக்கே பாலம் இல்லாததால், மாணவ, மாணவியர் மழைக்காலங்களில் மிகவும் சிரமப்பட்டு பள்ளிக்கு தண்ணீரில் நீந்தி செல்லும் நிலை உள்ளது.

காட்டாற்றில் திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் மாணவ, மாணவியர் வெள்ளத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் மாணவியர் சைக்கிளில் செல்லும் போது அவர்களது உடைகள் நனைவதால், அவர்கள் பள்ளியில் ஈரத்துடனே கல்வி கற்க வேண்டிய நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் பெருங்காடு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியரின் நலனை கருத்தில் கொண்டு, நரசிங்க காவேரியின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என பொதுமக்களும், மாணவ, மாணவியரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: