மழையால் சூழ்ந்த பெரியகங்கணாங்குப்பம் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் திடீர் மறியல்

கடலூர், அக். 31: வடகிழக்கு பருவமழை தீவிரமாகி உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழையின் அளவு கூடுதல் ஆகியுள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதற்கிடையே கடலூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியகங்கணாங்குப்பம் ஊராட்சியில் நேற்று பெய்த தொடர் மழையால் கிராமத்தில் மழைநீர் சூழ்ந்து கிராம மக்களை அவதிக்குள்ளாக்கியது.

தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள இவ்வூர் மழைக்காலங்களில் வெள்ளம் சூழ்ந்து கிராமத்தில் இயல்பு வாழ்க்கையை பாதிப்படையச் செய்து வருகிறது. சுமார் எட்டாயிரம் பேர் வசிக்கின்ற இவ்வூராட்சி கடலூர் நகரின் அருகே அமைந்துள்ள புறநகர் பகுதி என்றே கூறுகின்றனர்.

வடிகால் வசதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இல்லாமல் இருப்பதால் கிராம மக்களை அவதிக்கு உள்ளாக்கி வருகிறது. கடலூருக்கு அருகாமையில் உள்ள இக்கிராமத்திலிருந்து அலுவலகம் செல்லும் அலுவலர்கள், பல்வேறு தொழிற்சாலைகளுக்கு செல்லும் அதிகாரிகள், தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் என பல்வேறு தரப்பினர் வசித்து வரும் நிலையில் அடிப்படை வசதி இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 2015ஆம் ஆண்டு தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் ஏற்பட்ட சிறு உடைப்பின் காரணமாக இவ்வூராட்சியில் வெள்ளம் சூழ்ந்து கிராம மக்களை பெரிதும் பாதிப்படையச் செய்தது.

அதிலிருந்து தொடர்ந்து வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும் என கிராம தரப்பினர் மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் ஆண்டுகள் பல கடந்தும் நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருப்பதால் ஊராட்சியில் மழைக்காலங்களில் வெள்ளநீர் சூழ்ந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த ஐந்து நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கிராமத்தில் உள்ள பள்ள தெரு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து கிராம மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் கடலூர் உள்ளிட்ட நகர் பகுதியில் இருந்து வீட்டுக்கு திரும்பும் கிராம மக்கள் விஷ பூச்சிகள் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் அவதிக்குள்ளாகினர்.

இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் அலட்சிய போக்கு மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து நேற்று பாதிப்படைந்த கிராமமக்கள் தங்கள் கிராம பகுதியான கடலூர்- புதுச்சேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற டிஎஸ்பி சாந்தி தலைமையிலான போலீசார் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தப்பட்ட பாதிப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். இதை தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். போராட்டத்தின் காரணமாக ஒரு மணி நேரம் கடலூர்- புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: