விவசாயிகள் பயன் பெறும் வகையில் நடப்பாண்டு நபார்டு திட்டத்தின்கீழ் 20 பண்ணை குட்டைகள் அமைப்பு

கரூர், அக். 25: கரூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும்வகையில் நடப்பு ஆண்டில் வேளாண்மை பொறியியல் துறை மூலமாக 20 பண்ணைக் குட்டைகள் நபார்டு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட உள்ளது. விவசாயத்தில் பண்ணைக்குட்டையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு 8202 பண்ணைக்குட்டைகள் ரூ.82.02 கோடி செலவில் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டது. இதில் கரூர் மாவட்டத்தில் 20 பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுவாக மழைக்குறைவின் காரணமாக கரூர் மாவட்டத்தில் அடிக்கடி வறட்சி ஏற்பட்டு விளைச்சல் பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்கொள்கின்றனர். இதற்கு முதன்மையான காரணம் பயிர்களுக்கு தேவையான நேரத்தில், தேவையாள அளவு பாசனநீர் கிடைக்காததே ஆகும்.

இதற்கு தீர்வாக வயல்வெளிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்து பெய்யும் மழைநீரை முறையாக சேமித்தால், இந்த நீரை கொண்டு தேவையான நேரத்தில் பயிர்களுக்கு உயிர் நீர் அளித்து, நல்ல மகசூலை விவசாயிகள் அடையலாம். இதனால் நல்ல வருவாயும் உறுதி செய்யப்படுகிறது. மேலும் பண்ணைக் குட்டையினை நீர் ஆதாரமாக கொண்டு தெளிப்புநீர் பாசன அமைப்பை நிறுவி, பயிர்களுக்கு சிக்கனமான முறையில் நீர்பாய்ச்சுவதன் மூலம் கூடுதலான பரப்பில் பாசன வசதியை ஏற்படுத்திக்கொள்ளலாம். பண்ணைக் குட்டைகளில் மீன்கள் வளர்த்து அதன் மூலம் கூடுதல் வருமானத்தையும் விவசாயிகள் பெறலாம்.

சுமார் 45 சென்ட் பரப்பளவில், 30 மீட்டர் (100 அடி) நீளமும், 30 மீட்டர் அகலமும், 2 மீட்டர் ஆழமும் கொண்ட பண்ணைக்குட்டையினை அமைத்தால், இதில் 18 லட்சம் லிட்டர் நீர் அல்லது 63.500 கனஅடிநீர் சேமிக்கப்படுகிறது. 30 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம், 2 மீட்டர் ஆழம் கொண்ட பண்ணைக்குட்டை அமைப்பதற்கு 1லட்சம் செலவாகிறது. இந்த பண்ணைக்குட்டைகள் 100 சதவீத மானியத்துடன் அரசு செலவில் விவசாயிகளுக்கு அமைத்துக் கொடுக்கப்படுகிறது. பண்ணைக் குட்டையின் நீளம், அகலம், ஆழத்தினை நிலத்தின் அமைப்பிற்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்ளலாம்.

நடப்பு ஆண்டில் கரூர் மாவட்டத்தில் 20 பண்ணைக் குட்டைகள் அமைக்க தற்போது இலக்கு பெறப்பட்டுள்ளது. ஒரு பண்ணைக்குட்டை அமைப்பதற்கு ரூ.1 லட்சம் வீதம் 20பண்ணைக் குட்டைகள் அமைக்க மாவட்டத்திற்கு ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசின் முழு நிதிஉதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின்கீழ், பண்ணைக்குட்டை அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்களது பட்டா நகல், அடங்கல், புலவரைபட நகல் ஆகிய ஆவணங்களுடன் கீழ்கண்ட வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை தொடர்புகொண்டு பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு கரூர் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளர் சக்திவேல், குளித்தலை உபகோட்ட அலுவலக உதவிசெயற்பொறியாளர் அசோகன் ஆகியோரை தொடர்பு கொள்ள கேட்டு கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,. கரூர் தாந்தோணிமலை, மில்கேட், அண்ணாநகர், செயற்பொறியாளர், பசுபதிபாளையம் கருப்பக்கவுண்டன்புதூர் உதவி செயற்பொறியாளர் அலுவலகம், குளித்தலை பெரியபாலம், பரிசல்துறை, ரோடு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: