பிஏபி கால்வாயில் ஆக்கிரமிப்பு அதிகம்

உடுமலை, அக். 24:  பிஏபி கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், கோட்டாட்சியர் இந்திரவள்ளி தலைமையில் உடுமலையில் நேற்று நடந்தது.  இதில் உடுமலை வட்டாட்சியர் தயானந்தன், மடத்துக்குளம் வட்டாட்சியர் பழனியம்மாள், கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் கிருஷ்ணவேணி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.  கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் விவசாயிகள் அளித்த மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து முதலில் விவாதிக்கப்பட்டது. கொங்கல் நகரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுதல், படைப்புழு தாக்குதலுக்கு நிவாரணம் கேட்டு அளித்த மனு போன்றவற்றுக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு கோட்டாட்சியர் அறிவுறுத்தினார். மேலும் குறிச்சிகோட்டை சின்னகுமாரபாளையத்தில் வண்டி தடம் அமைக்க வேண்டி கடந்த 2 ஆண்டாக மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் குற்றம்சாட்டினர்.விவசாயி மவுனகுருசாமி பேசியதாவது: கோழிப்பண்ணை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உப்பாறு ஓடையில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை வெட்ட வேண்டும். கோட்டமங்கலத்தில் உள்ள கலவை ஆலைக்கு கொண்டு செல்லப்படும் ஜல்லி கற்கள் சாலையில் சிதறி கிடப்பதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர் என்றார்.

உடுக்கம்பாளையம் பரமசிவம்: சனுப்பட்டி குளத்தை தூர்வார வேண்டும். பிஏபி கால்வாயில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது.குழு அமைத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் கரைகள் தெரியாத அளவுக்கு போய்விடும். சாலையோரம் தனியார் நிறுவனத்தினர் கேபிள் அமைக்க தோண்டும் குழிகளால் விபத்து ஏற்படுகிறது. இதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றார்.மேலும் எரிசனம்பட்டி பகுதியில் அதிகளவில் திருட்டுச் சம்பவங்கள் நடைபெறுவதால், அங்கு புறக்காவல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது பற்றி பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் உறுதி அளித்தார்.

Related Stories: