பல ஆண்டுகளாக திறக்காத ஒட்டன்சத்திரம் வேளாண் அங்காடி நவ.3ல் திறப்பு இனி போக்குவரத்து நெரிசல் குறையும்

ஒட்டன்சத்திரம், அக். 23: ஒட்டன்சத்திரத்தில் பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த வேளாண் விளைபொருள் அங்காடி நவ.3ல் திறக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட் தென்னிந்தியாவின் 2வது மிகப்பெரிய மார்க்கெட்டாகும். ஒட்டன்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள் இங்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கிருந்து கரூர், சேலம், நாமக்கல், திருச்சி, தூத்துக்குடி ஆகிய வெளி மாவட்டங்களுக்கும், கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் ஏராளமான காய்கறிகள் தினந்தோறும் டன் கணக்கில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.ஒட்டன்சத்திரம் பஸ்நிலையம் எதிரே நகராட்சிக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தில் 300க்கும் மேற்பட்ட கடைகள் கொண்டு தற்போடு மார்க்கெட் இயங்கி வருகிறது. மேலும் நகரின் மைய பகுதியில் மார்க்கெட் அமைந்துள்ளதால் ஞாயிறு மற்றும் பண்டிகை தினங்களில் இப்பகுதி முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதனை கருத்தில் கொண்டு கடந்த திமுக ஆட்சியில் நாகணம்பட்டி புறவழிச்சாலை கேகே நகரில் அமைந்துள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் சுமார் ரூ.308.20 லட்சம் செலவில் 2018 டிச.28ல் அப்போது இருந்த வேளாண்மை துறை அமைச்சர் கேஎன்.நேருவால் 100 கடைகள் கொண்ட வேளாண் விளைபொருள் அங்காடி திறந்து வைக்கப்பட்டது. ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பின் இதுவரை இந்த அங்காடி பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே நிலையில் காணப்பட்டது. இதனால் அரசின் கோடிக்கணக்கான பணம் வீணாகும் நிலை ஏற்பட்டு வந்தது.

Advertising
Advertising

இதையறிந்த சமூகஆர்வலர்கள் ஐகோர்ட் மதுரை கிளையில் அங்காடியை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என வழங்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை 2019 அக்.21ல் வேளாண் விளைபொருள் அங்காடியை நவ.3ம் தேதி திறந்து நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என தீர்ப்பளித்தது. இதனடிப்படையில் தற்போது இயங்கி வரும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் உள்ள கடைகள் வேளாண் விளைபொருள் அங்காடிக்கு இடம்பெயர்கின்றன. இதுகுறித்து திண்டுக்கல் வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சந்திரசேகரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஜோசப்அருளானந்தம் ஆகியோர் கூறியதாவது, ‘சுமார் 16 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ள இந்த அங்காடியில் ஏ, பி, சி, டி என்ற 4 பிரிவுகளில் சுமார் 100 கடைகள் உள்ளது. இங்கு தேவையான குடிநீர் வசதி, மின்சார வசதி, ஆண் பெண் இருபாலருக்கும் 20க்கும் மேற்பட்ட கழிப்பறை வசதி, காய்கறிகளை காய வைப்பதற்கான வசதி, வங்கி வசதி, காய்கறி வண்டி எடைமேடை, காய்கறிகளை பதப்படுத்தி பாதுகாப்பதற்கான 25 மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கு மற்றும் 5 மெட்ரிக் டன் குளிர்பதன கிடங்கு, மழைநீர் தொட்டி, கண்காணிப்பு கேமிராக்கள் உள்ளிட்ட நவீன வசதிகளுடன் வரும் நவம்பர் 3ம் தேதி திறக்கப்படவுள்ளது. இந்த வாய்ப்பினை வியாபாரிகளும், விவசாயிகளும் பயன்படுத்தி கொள்ளலாம். இதன்மூலம் இனி போக்குவரத்து நெரிசல் குறையும்’ என்றனர்.

Related Stories: