லாரி டிரைவரை நள்ளிரவில் தாக்கி ₹22 ஆயிரம் பறித்த திருநங்கைகள்

சேலம், அக்.23: சேலத்தில் நள்ளிரவில் லாரி டிரைவரை தாக்கி ₹22 ஆயிரத்தை பறித்து சென்ற திருநங்கைகளை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் தாத்தாதிரிபுரம் குருவங்காட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி (52), லாரி டிரைவர். இவர், நேற்று முன்தினம் இரவு ராசிபுரத்திலிருந்து சென்னை நோக்கி லாரியை ஓட்டிச் சென்றார். சேலம் அம்மாபேட்டை தனியார் கல்லூரி  அருகில் லாரியை நிறுத்தி கேபினில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த 3 திருநங்கைகள் லாரியில் ஏறி சுப்ரமணியை திடீரென தாக்கி அவரிடமிருந்த 22 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பியோடினர். அப்போது, இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அம்மாபேட்டை போலீசாரிடம் சம்பவம் குறித்து சுப்ரமணி புகார் அளித்தார். அந்நேரம் எதிரே வந்த ஆட்டோவிலிருந்து 3 திருநங்கைகள் போலீசாரை பார்த்து இறங்கி தப்பியோடினர். இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் ஆட்டோ டிரைவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், உடையாப்பட்டியை சேர்ந்த திருமுருகன் (36) என்பது தெரியவந்தது. அவரிடம் ஆட்டோவில் வந்த திருநங்கைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>