ஆத்தூர் அருகே இருதரப்பினர் மோதலில் 2 பேர் காயம் மறியல் போராட்டத்தால் பரபரப்பு

ஆத்தூர், அக்.23: ஆத்தூர் அருகே இருதரப்பினர் மோதலில் 2 பேர் காயமடைந்தனர். அவர்களை மருத்துவமனையில் அனுமதிக்க கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  ஆத்தூர் அருகே தளவாய்பட்டி கிராமத்தில் கடந்த ஆண்டு கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட பள்ளி சிறுமி ராஜலட்சுமியின் நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது வீட்டருகே அமைக்கப்பட்டுள்ள மணி மண்டப திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்காக மக்கள் தேசம் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி தனது ஆதரவாளர்களுடன் தளவாய்பட்டிக்கு வந்திருந்தார். அப்போது, பழனியாபுரி கிராமத்தின் வழியாக சென்ற மக்கள் தேசம் கட்சியினர் அப்பகுதியைச் சேர்ந்த மாட்டு வியாபாரி அசோக்குமார்(30) மற்றும் ராமசாமி(35) ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதில், காயமடைந்த அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கிராம மக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்த தகவலின் பேரில், ஆத்தூர் டிஎஸ்பி ராஜு தலைமையிலான போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories:

>