தீபாவளி நெரிசலை குறைக்கும் வகையில் தஞ்சை, புதுகை, மதுரைக்கு தற்காலிக பஸ் நிலையம் நாளை முதல் இயக்கம்: மாநகர கமிஷனர் தகவல்

திருச்சி, அக். 23: தீபாவளி நெரிசலை குறைக்கும் வகையில் திருச்சியில் தஞ்சை, புதுகை, மதுரைக்கு தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் வரும் 30ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது என மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மாநகரில் உள்ள ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. மேலும் தீபாவளி நாளுக்கு முதல் மற்றும் 2ம் நாளில் அரசு விடுமுறை அறிவித்துள்ளதால் வெளியூரில் வேலையில் உள்ளவர்கள் சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். இதனால் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டத்தை குறைக்கும் வகையிலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தேசிய நெடுஞ்சாலையில் எக்காரணத்தை கொண்டும் எவ்வித வாகனங்களையும் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தக்கூடாது. பஸ்களை அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிறுத்தத்தில் மட்டுமே நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்ற வேண்டும். போக்குவரத்து சிக்னல்களில் பயணிகளை இறக்கி ஏற்றக்கூடாது. வேன்கள், கார்கள் மற்றும் ஆட்டோக்களை அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில்தான் நிறுத்த வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாகவும், சாலையோரங்களிலும் நிறுத்த கூடாது. வியாபாரிகள் மற்றும் தரைக்கடை வியாபாரிகள் போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்து கடைகளை அமைத்து விற்பனை செய்யக்கூடாது. பட்டாசு வியாபாரம் செய்பவர்கள் அனுமதி பெற்ற இடத்தில் மட்டும்தான் விற்பனை செய்ய வேண்டும். தரைக்கடை மற்றும் தள்ளுவண்டியில் வைத்து பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதில் ஏதேனும் குளறுபடிகள் இருந்தால் காவல் கட்டுப்பாட்டு அறை 100க்கும் மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் வாட்ஸ்அப் 96262 73399 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்க வேண்டும்.

Advertising
Advertising

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (24ம் தேதி) முதல் 30ம் தேதி வரை தஞ்சை, புதுக்ேகாட்டை, மதுரை மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் தற்காலிக பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. அதன்படி தஞ்சை மார்க்கத்திற்கு சோனா, மீனா தியேட்டர் அருகேயும், புதுக்கோட்டை மற்றும் மதுரை மார்க்கத்திற்கு மன்னார்புரம் ரவுண்டானாவில் இருந்து பஸ்கள் இயக்கப்படும். தென் மாவட்டங்கள் மற்றும் புதுக்கோட்டை மார்க்கத்தில் இருந்து திருச்சி மாநகர் வழியே சென்னை செல்லும் பஸ்கள் மன்னார்புரம் வந்து பயணிகளை இறக்கி ஏற்றி மன்னார்புரத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியே சென்னை செல்ல வேண்டும். மற்ற ஊர்களுக்கு செல்லும் பஸ்களின் வழித்தடத்தில் எவ்வித மாற்றமும் இன்றி வழக்கம் போல் செல்ல வேண்டும். மேலும் தற்காலிக பஸ்நிலையத்தில் பயணிகளுக்கு தேவையான நிழற்குடை வசதி, பொது கழிப்பிட வசதி, குடிநீர் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கமிஷனர் அமல்ராஜ் வௌயிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

Related Stories: