மல்லுக குளத்தில் கழிவுநீர் கலப்பதால் துர்நாற்றம் விரைந்து தடுக்க வலியுறுத்தல்

கும்பகோணம், அக். 17: தாராசுரம் மார்க்கெட் அருகில் உள்ள மல்லுக குளத்தில் கழிவுநீர் கலப்பதால் ஏற்படும் துர்நாற்றத்தால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.கும்பகோணம்- தஞ்சை மெயின் ரோடு தாராசுரம் மார்க்கெட் அருகில் மல்லுக குளம் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இக்குளம் மல்லுக செட்டிதெருவில் உள்ள சந்தானகோபாலசாமி கோயிலுக்கு சொந்தமானது. தற்போது நகராட்சியின் பராமரிப்பில் இருந்து வருகிறது. இந்த குளத்துக்கு அரசலாற்றிலிருந்து தண்ணீர் வந்து அப்பகுதியில் உள்ள 100 ஏக்கர் அளவில் பாசனத்துக்கு சென்று மீண்டும் அரசலாற்றில் வடிகிறது.குளத்தை சுற்றிலும் வீடுகள், வணிக நிறுவனங்கள் வந்ததாலும், ஆற்றிலிருந்து தண்ணீர் வரும் பாதை ஆக்கிரமிப்பாலும் குளத்தில் உள்ள மழைநீருடன் வீடுகள், வணிக நிறுவனங்களிலிருந்து வரும் கழிவுநீரும் தேங்கியது. சில ஆண்டுகளுக்கு முன் பெய்த பலத்த மழையால் குளத்தின் தென்கரையில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதை சீரமைக்காமல் உள்ளனர். மேலும் மார்க்கெட்டில் உள்ள கழிவுகள், கழிவுநீர், வணிக நிறுவனத்தின் கழிவுநீர், உலோக பட்டறை கழிவுநீர் கலப்பதால் குளத்தில் உள்ள தண்ணீர் நிறமாறி அசுத்தமாக உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது.மாவட்ட நிர்வாகம் தூய்மை இந்தியா என்று திட்டத்தின்கீழ் பல்வேறு தூய்மை பணிகளை செய்து வந்தாலும் கும்பகோணம் நகரத்தின் முகப்பில் குளத்தில் தண்ணீர் மாசடைந்து உள்ளதை கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே மல்லுக குளத்தில் கழிவுநீரை அகற்றுவதுடன் குளத்தை தூர்வார வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: