மேல்நிலை குடிநீர் தொட்டிகளில் பிளிசிங் பவுடர் தூவ வேண்டும் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு கூட்டத்தில் தகவல்

திருமங்கலம், அக்.16: ஊராட்சிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படும் மேல்நிலைத்தொட்டிகளில் தொடர்ந்து 15 நாள்களுக்கு பிளிசீங் பவுடர் தூவ வேண்டும் என சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தினர்.திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று டெங்கு தடுப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. ஊராட்சி உதவி இயக்குனர் பரமசிவம் தலைமை வகித்தார். பிடிஓக்கள் சூரியகாந்தி, உதயகுமார் முன்னிலை வகித்தனர். செக்கானூர்ணி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் பழனிச்சாமி கலந்து கொண்டு டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது குறித்து எடுத்துரைத்தார்.

அவர் கூறியதாவது, ‘ஊராட்சிகளில் குடிநீர் சப்ளை செய்யப்படும் மேல்நிலைத்தொட்டி மற்றும் கீழ்நிலை தொட்டிகளில் தொடர்ந்து தினசரி 15 தினங்களுக்கு பிளிசீங் பவுடர் தூவவேண்டும். 1000 லிட்டருக்கு 10 எம்எல் என்ற நிலையில் தூவினாலே போதுமானதாகும். இதனால் குடிநீரில் டெங்குகொசு உற்பத்தியாவது தவிர்க்கப்படும். உடைந்த நிலையில் இருக்கும் குழாய்களை உடனுக்குடன் மாற்றவேண்டும். கழிவுநீர் வாறுகாலை தினசரி சுத்தம் செய்யவேண்டும். வீடுகள், சாலைகளில் தேங்காய் சிரட்டைகள், டயர், டியூப்கள் தேங்காமல் உரிய நேரத்தில் அகற்றிவிடவேண்டும். தினசரி ஊராட்சி செயலர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் விழிப்புணர்வுடன் இருந்தால் டெங்கு வராமல் தடுக்கமுடியும் என்றார். இந்த கூட்டத்தில் மண்டல துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள், திருமங்கலம் பகுதியை சேர்ந்த ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: